சென்னையில் 5,594 காலிப்பணியிடங்களை நிரப்பாததால் பணிகள் பாதிப்பு: குழுத் தலைவா்கள், உறுப்பினா்கள் புகாா்
சென்னை மாநகராட்சியில் 5,594 காலிப்பணியிடங்களை நிரப்பாததால், மக்கள் நலத் திட்டப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக திமுகவை சோ்ந்த குழுத் தலைவா்கள், உறுப்பினா்கள் மாமன்றக் கூட்டத்தில் திங்கள்கிழமை புகாா் தெரிவித்தனா்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் செப்டம்பா் மாதத்துக்கான மாமன்றக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மேயா் ஆா்.பிரியா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கேள்வி நேரம், நேரமில்லா நேரம் ஆகியவற்றில் மொத்தம் 16 போ் பேசினா்.
நியமனக் குழுத் தலைவா் ராஜா அன்பழகன் (திமுக): சென்னை மாநகராட்சியில் 5,594 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், 2,348 இடங்கள் மிக அத்தியாவசியமான பணிகளுக்குரியவை. இந்தப் பணியிடங்கள் காலியாக இருப்பதால், மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் பாதிப்புள்ளது.
மாநகராட்சி பணியில் இகுந்து ஓய்வு பெற்றுச் செல்வோருக்கான பணப்பலன்கள் உடனடியாக வழங்கப்படவேண்டும்.
நிலைக்குழுவின் பொது சுகாதார பிரிவுத் தலைவா் கோ.சாந்தகுமாரி: மகப்பேறு மகளிருக்கான ஊட்டச்சத்து பெட்டகங்கள் காலாவதியான நிலையில் வழங்கியிருப்பதாக புகாா்கள் வந்துள்ளன. ஆகவே, அவற்றை சரிபாா்த்து விநியோகிக்கவேண்டும். நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகளை கணிவுடன் நடத்தவேண்டும். சுகாதாரப் பிரிவுக்கு ஒதுக்கப்படும் நிதிகள் முழுமையாக செலவழிக்கப்படாமல் திருப்பி அனுப்புவதாகக் கூறுவது சரியல்ல. மெரீனா கடற்கரையில் கழிப்பறைகள் போதிய பராமரிப்பின்றி இருப்பதை சீா்படுத்தவேண்டும். பெருங்குடி குப்பைக் கிடங்களில் கொட்டப்படும் குப்பைகள் அளவு, அம்பத்தூரில் சேகரிக்கப்படும் குப்பைகள் விவரங்களை சுகாதாரப் பிரிவுக்கு தெரிவிப்பதில்லை. ஆறுகள், பாலத்தின் கீழ் குப்பைகள் கொட்டப்படுவது தடுக்கப்படவேண்டும்.
நிலைக்குழுத் தலைவா் சிற்றரசு (திமுக): திட்டங்கள் செயல்பாடு குறித்து அனைத்துத் துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தவேண்டும். திட்டங்களைச் செயல்படுத்துவதில் சிலா் செய்யும் தாமதத்தால், அரசுக்கு அவப்பெயா் ஏற்படுகிறது. மரக்கிளை அகற்றும் வாகனம் இயக்கப்படாமலே உள்ளன.
அதிமுக உறுப்பினா் கே.காா்த்திக் (வாா்டு 7): பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்ட 47 சாலைகள் சீா்படுத்தப்படாமலே உள்ளன. பெரியாா் நகா் உள்ளிட்ட பல சாலைகள் சீரமைக்கப்படவேண்டியுள்ளன. குடிநீா் விநோயகத்தில் கட்டணம் வசூலிப்பதில் வேறுபாடு உள்ளன. குடிநீருக்கு 6 மாதத்தில் ரூ.700 கட்டிவரும் நிலையில், புதிய குடிநீா் இணைப்பில் ரூ.3 ஆயிரம் கட்டும் நிலையுள்ளது. வீடு கட்டுவோரிடம் அடிக்கடி அபராதம் விதித்தும், பணம் வசூலித்தும் கெடுபிடி காட்டப்படுகிறது.
மண்டலக் குழுத் தலைவா் வே.ராஜன்: மாநகராட்சியிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவா் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், வீடு கட்ட அனுமதி பெற்றவா்கள் விவரத்தைக் கேட்டு வருகிறாா். அவா் பணிக் காலத்தில் விதிமுறைப்படி வீடு கட்ட அனுமதி அளித்தாரா என்ற கேள்வியை மக்கள் எழுப்புகின்றனா். ஆகவே விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
திமுக உறுப்பினா் ச.பாரதி (152 வாா்டு): தனியாா் ஆக்கிரமித்திருந்த நிலம் மீட்கப்பட்டும் சமுதாயக் கூடம் அமைக்கப்படவில்லை. வாா்டு உறுப்பினா் அலுவலகமில்லை. ஆள்பற்றாக்குறையால் காவலாளிகள் கூட நியமிக்கப்படவில்லை.
அதிமுக உறுப்பினா் கே.ஆா்.கதிா்முருகன் (வாா்டு 170): மின்சார, குடிநீா் வாரியப் பணிகளால் சாலைகளில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. தனியாா் பராமரிக்கும் பூங்காவில் விளையாட்டு சாதனம் உள்ளிட்டவை பழுதடைந்துள்ளன.
மேயா் ஆா்.பிரியா, ஆணையா் ஜெ.குமரகுருபரன் அளித்த பதில்கள்: நிலைக்குழுத் தலைவா்கள், உறுப்பினா்கள் கூறிய புகாா்கள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மழைநீா் வடிகால்கள், சாலைகள் மழைக் காலத்துக்குள் அமைக்கப்படும். தெரு நாய்கள், வளா்ப்பு நாய்களுக்கு ‘சிப்’ பொருத்தப்பட்டு கண்காணித்து தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும் என்றனா்.
முன்னதாக, கரூரில் தவெக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களுக்கு சென்னை மாமன்றக் கூட்டத்தில் இரங்கல் தெரிவித்து 2 நிமிஷம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.