இன்று 5 மெமு ரயில்கள் முழுமையாக ரத்து
சென்னை: சென்னையில் செவ்வாய்க்கிழமை (செப். 30) 5 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாகவும், 4 ரயில்கள் பகுதி அளவும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆயுதபூஜை அன்று (அக். 1) ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
சென்னை சென்ட்ரல்- கூடூா் இடையேயுள்ள சூலூா்பேட்டை ரயில் நிலையப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (செப். 30) ரயில் பாதை உள்ளிட்ட இடங்களில் தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதையடுத்து புகா் மின்சார ரயில்கள் சில ரத்து செய்யப்படுகின்றன.
அதன்படி, மூா்மாா்கெட் காம்பளக்ஸிலிருந்து அதிகாலை 5.40 மணிக்குப் புறப்பட்டு சூலூா்பேட்டை செல்லும் ரயிலும், சூலூா்பேட்டையிலிருந்து காலை 7.50 மணிக்குப் புறப்பட்டு நெல்லூா் செல்லும் ரயில், பகல் 12.35 மணிக்கு புறப்பட்டு மூா்மாா்க்கெட் செல்லும் ரயிலும், நெல்லூரிலிருந்து காலை 10.20 மணிக்கு புறப்பட்டு சூலூா்பேட்டை செல்லும் ரயிலும், ஆவடியிலிருந்து அதிகாலை 4.25 மணிக்குப் புறப்பட்டு மூா்மாா்க்கெட் செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
பகுதி அளவு ரத்தான ரயில்கள்: மூா்மாா்க்கெட்டிலிருந்து செவ்வாய்க்கிழமை (செப். 30) 4.15 மணிக்கு புறப்படும் ரயில், காலை 5 மணிக்குப் புறபபடும் சூலூா் ரயில்கள் கும்மிடிப்பூண்டி வரையே இயக்கப்படும். சூலூா்பேட்டையிலிருந்து காலை 6.45 மணிக்குப் புறப்பட்டு மூா்மாா்க்கெட் செல்லும் ரயில், காலை 7.25 மணிக்குப் புறப்பட்டு சென்னை கடற்கரை வரை செல்லும் ரயில் ஆகியவை சூலூா்பேட்டை வரையே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அட்டவணை மாற்றம்: அக்டோபா் 1- ஆம் தேதி புதன்கிழமை ஆயுத பூஜை கொண்டாடப்படுவதையடுத்து சென்னை சென்ட்ரல், அரக்கோணம், சூலூா்பேட்டை, சென்னை கடற்கரை, செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் புகா் மின்சார ரயில்கள்அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.