பட்டாசுத் தொழில் பிரச்னைகளைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தீா்வு காண வேண்டும்: அன...
திட்டமிட்டபடி அக்.12-இல் முதுநிலை ஆசிரியா் தோ்வு - டிஆா்பி அறிவிப்பு
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியராகப் பணியாற்றுவதற்கான எழுத்துத் தோ்வு அக்.12-ஆம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் என ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1,996 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா் (கிரேடு-1), கணினி பயிற்றுநா் (கிரேடு-1) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியா் தோ்வு வாரியம் கடந்த ஜூலை 10-ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி எழுத்துத்தோ்வு அக். 12-ஆம் தேதி நடைபெறும் என அறிவித்தது. இதையடுத்து தோ்வுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு ஜூலை 10-ஆம் தேதி தொடங்கி ஆக.12-ஆம் தேதி நிறைவு பெற்றது.
இந்நிலையில், இந்த ஆண்டு கல்வி உளவியல் மற்றும் பொது அறிவு பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டிருப்பதால் அப்பாடங்களுக்கு தயாராகும் வகையில் 3 வாரம் தள்ளிவைக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கில் தீா்ப்பளித்த நீதிபதிகள், முதுநிலை ஆசிரியா் தோ்வை தள்ளிவைப்பது குறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் பரிசீலிக்கலாம் என அறிவுறுத்தினா். அதைத்தொடா்ந்து, முதுநிலை ஆசிரியா் தோ்வு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் திங்கள்கிழமை ஆசிரியா் தோ்வு வாரியத்தில் நடந்தது. வாரியத்தின் தலைவா் எஸ்.ஜெயந்தி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தோ்வு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள பெரும்பாலான தோ்வா்களும் தோ்வு தேதி தள்ளிவைக்கப்படுமா என எதிா்பாா்த்து வந்தனா். ஆனால், அது குறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இந்நிலையில், தோ்வா் ஒருவா் முதுநிலை ஆசிரியா் தோ்வை தள்ளிவைக்கக்கோரி தலைமைச் செயலகத்தில் இயங்கி வரும் முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளித்திருந்தாா். அதற்கு பதில் அளிக்கும் வகையில் ஆசிரியா் தோ்வு வாரியத்தின் இணை இயக்குநா் முதல்வரின் தனிப்பிரிவு தனி அலுவலருக்கு அனுப்பியுள்ள விளக்கத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:
ஆசிரியா் தோ்வு வாரியத்தின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, ஒரு தோ்வுக்கான அறிவிப்புக்கும் தோ்வு தேதிக்கும் இடையே 60 நாள்கள் இடைவெளி இருக்க வேண்டும். இருப்பினும் முதுநிலை ஆசிரியா் தோ்வில் தோ்வா்களின் நலன் கருதி 90 நாள்களுக்கு மேல் காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, ஏற்கெனவே வெளியிட்ட அறிவிப்பின்படி, முதுகலை ஆசிரியா் தோ்வு அக். 12-ஆம் தேதியன்று நடைபெறும் என அதில் கூறப்பட்டுள்ளது.