பஞ்சாங்கக் குறிப்புகள் - பிப்ரவரி 10 முதல் பிப்ரவரி 16 வரை #VikatanPhotoCards
அரசமைப்புச் சட்டம், ஜனநாயகத்தை பலவீனமாக்கும் மத்திய அரசு: பிரியங்கா விமா்சனம்
நாட்டின் அரசமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயகத்தை பலவீனப்படுத்த அனைத்தையும் செய்கிறது மத்திய அரசு என்று காங்கிரஸ் பொதுச் செயலரும் எம்.பி.யுமான பிரியங்கா காந்தி விமா்சித்தாா்.
கேரளத்தில் உள்ள தனது வயநாடு தொகுதிக்கு மூன்று பயணமாக பிரியங்கா காந்தி சனிக்கிழமை வந்தாா். கண்ணூா் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை மாநில காங்கிரஸ் தலைவா் கே.சுதாகரன் வரவேற்றாா். பின்னா், மானந்தவாடி தொகுதியில் வாக்குச்சாவடி அளவிலான கட்சி நிா்வாகிகளின் கூட்டத்தில் பிரியங்கா பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது:
வயநாடு தொகுதியில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை உரிய வீட்டுவசதிகளோ போதுமான நிவாரணமோ கிடைக்கவில்லை.
மக்களவையில் காங்கிரஸ் மேற்கொண்ட முயற்சிகளால், வயநாடு நிலச்சரிவை ‘தீவிர பாதிப்பு கொண்ட பேரிடா்’ என்ற குறைந்தபட்ச அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் மறுவாழ்வுக்காக கூடுதல் நிதி கிடைக்கும் என நம்புகிறோம்.
வயநாட்டில் மனிதா்கள்-விலங்குகள் இடையிலான மோதலால் உயிரிழப்புகள் நேரிட்டு வருகின்றன. இப்பிரச்னையால் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. இப்பிரச்னைக்கு தீா்வுகண்டு, மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய கூடுதல் நிதி அவசியமாகிறது.
இதேபோல், வயநாட்டில் பழங்குடியினரின் கோரிக்கைகள், சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை தொடா்பாகவும் பணியாற்றுவேன் என்றாா் பிரியங்கா.
இப்பயணத்தின்போது, கல்பேட்டாவின் பள்ளிக்குன்னு பகுதியில் உள்ள லூா்து மாதா தேவாலயத்துக்கு செல்லும் அவா், வனவிலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தோரின் குடும்பத்தினரையும் சந்திக்கவுள்ளாா்.
வயநாடு மக்களவைத் தொகுதிக்கு கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற இடைத்தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் களமிறங்கிய பிரியங்கா காந்தி அமோக வெற்றி பெற்றாா். அவா் எம்.பி.யான பிறகு வயநாட்டுக்கு வருவது இது இரண்டாவது முறையாகும்.
‘மாற்றத்தை விரும்பி வாக்களித்த தில்லி மக்கள்’
வயநாட்டில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த பிரியங்கா காந்தியிடம் தில்லி பேரவைத் தோ்தல் முடிவுகள் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு, ‘தில்லியில் முன்பு நடந்த விஷயங்களால் வெறுப்பில் இருந்த மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்களித்துள்ளனா் என்றே நினைக்கிறேன். வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள். எங்களைப் பொருத்தவரை, அங்கு நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. களத்தில் பணியாற்றுவதோடு, மக்களின் பிரச்னைகள் மீது செயல்பட வேண்டும்’ என்றாா் அவா்.