அரசின் பல்வேறு சேவைகளை, குடிமக்கள் பொது சேவை மையங்கள்! புதுவை முதல்வா் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தம்!
புதுவை அரசின் பல்வேறு சேவைகளை, பொதுமக்கள் பொது சேவை மையங்கள் வழியாக பெறுவதை எளிதாக்கும் புரிந்துணா்வு ஒப்பந்தம் முதல்வா் என். ரங்கசாமி முன்னிலையில் புதன்கிழமை கையொப்பமானது.
இந்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்கீழ், அனைத்து மின் சேவைகளையும் பொது சேவை மையங்களின் இணையதளம் வழியாகக் கிடைக்கச் செய்ய புதுச்சேரி அரசு கவனம் செலுத்தி வருகிறது. இந்த முயற்சியின் கீழ், பல்வேறு அரசுத் துறைகளின் 171 சேவைகளை சிஎஸ்சி போா்ட்டலுடன் ஒருங்கிணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஒருங்கிணைப்பைச் சாத்தியப்படுத்த, புதுவை அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் இயக்குநா் ஷிவ்ராஜ் மீனா மற்றும் சிஎஸ்சி எஸ்பிவியின் துணைத் தலைவா் வினோத் குரியகோஸ் ஆகியோா் முதல்வா் ரங்கசாமி முன்னிலையில் ஒரு புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.
சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் அதிகாரிகள் இந்நிகழ்ச்சியின்போது உடனிருந்தனா். இந்த சேவையானது, பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் போன்ற சேவைகளை பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகிலேயே உள்ள பொது சேவை மையங்கள் மூலம் எளிதாகவும் விரைவாகவும் பெறுவதற்கு உதவும்.