அரசியல் துணிச்சல் இல்லாமல் இந்தியா-அமெரிக்கா நல்லுறவு ஏற்பட்டிருக்காது: பைடன்
மன்மோகன் அரசியல் துணிச்சல் இல்லாமல் இந்தியா - அமெரிக்கா இடையிலான நல்லுறவு ஏற்பட்டிருக்காது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
2004 முதல் 2014 வரையில் இரு முறை பிரதமராக பதவி வகித்த மன்மோகன் சிங், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு காலமானாா்.
முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவுக்கு அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், கனடா, நேபாளம், ஆப்கானிஸ்தான், மாலத்தீவு, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவா்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனா்.
இந்த நிலையில், மன்மோகன் அரசியல் துணிச்சல் இல்லாமல் இந்தியா - அமெரிக்கா இடையிலான நல்லுறவு ஏற்பட்டிருக்காது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
முன்னாள் பிரதமரின் மன்மோகன் சிங் இழப்பு வருத்தம் அளிக்கிறது. அமெரிக்க-இந்தியா உறவுகளை வலுப்படுத்துவதில் மன்மோகன் சிங்கின் முக்கிய பங்கை பாராட்டிய பைடன், மன்மோகன் தொலைநோக்கு மற்றும் அரசியல் துணிச்சல் இல்லாமல் இந்தியா - அமெரிக்கா இடையிலான நல்லுறவு ஏற்பட்டிருப்பதற்கு சாத்தியமில்லை. இரு நாடுகளின் வளர்ச்சிக்காக புதிய பாதை அமைத்து, அதை வலுப்பெறச் செய்தவர்.
அமெரிக்க-இந்தியா அணுசக்தி ஒப்பந்தத்தை உருவாக்குவது முதல் இந்தோ-பசிபிக் கூட்டமைப்பின் நாடுகளுக்கு இடையே முதல் க்வாட் கூட்டமைப்பு தொடங்குவதற்கு உதவியது வரை, அவர் நமது நாடுகளையும் உலகையும் தொடர்ந்து பல தலைமுறைகளாக பலப்படுத்தும் பாதையை உருவாக்கி தந்ததின் முன்னேற்றத்தையும் பட்டியலிட்டார்.
மேலும் அவர் ஒரு உண்மையான அரசியல்வாதி என்றும், அர்ப்பணிப்புள்ள மக்கள் சேவகர். அனைத்தையும் தாண்டி மிகவும் அன்பான, அடக்கமான மனித புனிதர் என புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
2008 ஆம் ஆண்டு வெளிநாட்டு உறவுகளுக்கான செனட் வெளியுறவுக் குழுவின் தலைவராகவும், 2009 ஆம் ஆண்டு அரசுமுறை பயணமாக அமெரிக்கா வந்த போது துணை அதிபராக பிரதமர் சிங்கை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றேன். 2013 இல் புது தில்லியில் அவர் எனக்கு விருந்து அளித்தார்.
இந்த இக்கட்டான நேரத்தில், அவரது குடும்பத்தினர் மற்றும் இந்திய மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம் என பைடன் கூறியுள்ளார்.