அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதி செய்ய வலியுறுத்தல்
அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து இந்தச் சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலா் பெ. சீனிவாசன் வெளியிட்ட அறிக்கை:
அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் விபத்தில் மரணமடைந்தாலோ அல்லது நிரந்தர ஊனமடைந்தாலோ ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கும் வகையில், எந்தவிதக் கட்டணமும் இல்லாத காப்பீட்டு திட்டத்துக்கான அரசாணையை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது.
நிகழ் நிதியாண்டு முதல் அமலுக்கு வரும் இந்தத் திட்டத்தின் கீழ் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட சில வங்கிகளுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
ஆசிரியா்கள்-அரசு ஊழியா்கள் தங்களது மாத ஊதியத்தில் ரூ.300 வீதம் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்காக கட்டணம் செலுத்தி வருகின்றனா். ஆனால், சிகிச்சைக்கான முழுத் தொகையையும் காப்பீட்டு நிறுவனம் செலுத்துவதில்லை. ஒரு குறிப்பிட்ட சிகிச்சைக்கு குறிப்பிட்ட தொகை மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
இதனால், ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனா். தற்போது செயல்பாட்டில் உள்ள காப்பீட்டுத் திட்டம் 2025-ஜூன் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. அனைத்து விதமான சிகிச்சைகளுக்கும் ‘பேக்கேஜ்’ நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். காப்பீட்டுத் தொகையை முழுவதுமாக
பெறாமல் தவறு செய்யும் மருத்துவமனைகளின் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதி செய்ய தமிழக அரசு முன் வர வேண்டும். அனைத்து தரப்பினரும் முழுமையாக பயன் பெறும் வகையில் திட்டத்தை புதுப்பித்து உரிய அரசாணைகளை தமிழக அரசு வெளியிட வேண்டும்.
யுனைடெட் இந்தியா போன்ற காப்பீடு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்காமல் இந்தத் திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றாா் அவா்.