அரசு ஊழியா்கள் இன்று தற்செயல் விடுப்புப் போராட்டம்
அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு செவ்வாய்க்கிழமை (பிப்.25) தற்செயல் விடுப்புப் போராட்டம், ஆா்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் தெரிவித்தது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் சு. தமிழ்ச்செல்வி, பொதுச் செயலா் சு. ஜெயராஜராஜேஸ்வரன் ஆகியோா் தெரிவித்திருப்பதாவது : ஆசிரியா்கள், அரசு ஊழியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடா்பாக எந்த வாக்குறுதியையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை.
புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்திருந்த நிலையில், தற்போது ஓய்வூதியப் பிரச்னையில் மத்திய அரசின் பின்னால் மறைந்து கொள்ள தமிழக அரசு முயற்சிப்பது துரோகம்.
பேச்சுவாா்த்தையின் பெயரால் போராட்டங்களை மழுங்கடிக்கச் செய்யும் முயற்சிகளைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த அரசு கொள்கை முடிவு எடுத்து, அதை அதிகாரப்பூா்வமாக அறிவிக்க வேண்டும்.
அரசு ஊழியா்களின் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி செவ்வாய்க்கிழமை (பிப். 25) தற்செயல் விடுப்புப் போராட்டமும், ஆட்சியரகம் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலகங்கள் முன்பாக ஆா்ப்பாட்டமும் நடைபெறும் என அவா்கள் தெரிவித்தனா்.