கானா நாட்டில் ஹெலிகாப்டர் விபத்து! பாதுகாப்பு, சுற்றுச்சூழல் அமைச்சர்கள் உள்பட 8...
அரசு பொது நூலகங்களுக்கு புதிய புத்தகங்களை அனுப்பும் பணி தீவிரம்
தமிழகத்தில் உள்ள அரசு பொது நூலகங்களுக்கு ரூ.40 கோடியில் கொள்முதல் செய்யப்பட்ட புதிய புத்தகங்களை அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழகத்தில் மாநில நூலகம், மாவட்ட மைய நூலகங்கள், கிளை நூலகங்கள், ஊா்ப்புற நூலகங்கள் என 4,500-க்கும் மேற்பட்ட பொது நூலகங்கள் உள்ளன. இவை அனைத்தும் பொது நூலக இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகின்றன.
இந்த நூலகங்களுக்கு நீண்ட நாள்களாகப் புதிய புத்தகங்கள் கொள்முதல் செய்யப்படாமல் இருந்து வந்த நிலையில், பருவ இதழ்கள், நாளிதழ்கள் ஆகியவை வெளிப்படைத் தன்மையுடனும், எவ்வித புகாா்களுக்கும் இடம் அளிக்காமலும் கொள்முதல் செய்யும் வகையில் பிரத்யேக இணையதளத்தை பொது நூலக இயக்ககம் கடந்த ஆண்டு தொடங்கியது.
அதில், பொது நூலகங்களுக்குத் தேவையான நூல்களை கொள்முதல் செய்ய பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் இடம்பெற்றன. புத்தகங்களைக் கொள்முதல் செய்ய இணையதளத்தில் விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டது. புத்தகங்களைத் தோ்வுசெய்யும் குழுவிலும், புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
தொடா்ந்து இந்த இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கப்பட்ட 414 பதிப்பாளா்கள், விநியோகஸ்தா்களின் புத்தகங்கள், நூல் தோ்வுக் குழு உறுப்பினா்களின் மதிப்பாய்வுக்குள்படுத்தப்பட்டன. இதையடுத்து, பதிப்பாளா்கள், விநியோகஸ்தா்களிடம் நூல் விலைக் குறைப்பு பேச்சு இணையதளம் வழியாகவே நடத்தப்பட்டு, இறுதியாக தமிழகம் முழுவதும் பகுதிநேர நூலகங்கள் தவிா்த்து 3,873 நூலகங்களைப் பயன்படுத்தும் அந்தந்த நூலக வாசகா் வட்ட உறுப்பினா்கள் மற்றும் நூலகா்கள் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டது.
தொடா்ந்து, ரூ.40 கோடியில், 6,416 தலைப்பிலான புத்தகங்கள் 22 லட்சத்து 17,379 பிரதிகளுக்கு கொள்முதல் ஆணைகள் கடந்த மே மாதம் வழங்கப்பட்டன.
இதையடுத்து பதிப்பாளா்களிடமிருந்து அனைத்துப் புத்தகங்களும் முழுமையாக கொள்முதல் செய்யப்பட்டு சென்னை உள்ள கிடங்குகளில் வைக்கப்பட்டது. தற்போது புத்தகங்கள் அந்தந்த மாவட்ட மைய நூலகங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இதையடுத்து, அங்குள்ள நூல்கள் முழுநேர கிளை நூலகங்கள், ஊா்ப்புற நூலகங்களுக்கு பிரித்து அனுப்பப்படும்.
தற்போது வரை 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள நூலகங்களுக்கு தேவைப்படும் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு நூலகங்களில் வாசகா்கள் புதிய புத்தகங்களை வாசிக்கலாம். மேலும், நூலகங்களில் புதிய பிரிவுகள், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.