அரிசிக்கு ஏற்றுமதி வரி விதிப்பு விவசாயிகளுக்கு எதிரானது: கள் இயக்கம் குற்றச்சாட்டு
மத்திய அரசு அரிசிக்கு ஏற்றுமதி வரி விதித்திருப்பது விவசாயிகளுக்கு எதிரானது என கள் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுதொடா்பாக தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமி கரூரில் வெள்ளிக்கிழமை கூறியது:
உள்நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மத்திய அரசு ஏற்றுமதி செய்யும் புழுங்கல் அரிசிக்கு 20 சதவீத ஏற்றுமதி வரியை விதித்திருக்கிறது. இது விவசாயிகளுக்கு எதிரான விரோதப் போக்கு. விவசாய நாட்டிலேயே இருந்துகொண்டு வேளாண் விளை பொருள்களை ஏற்றுமதி செய்து, அதன்மூலம் அந்நிய செலாவணியை ஈட்டுவதுதான் இயற்கை நியதி. அதற்கு மாற்றாக ஏற்றுமதி செய்யும் பண்டங்களுக்கு குறிப்பாக அரிசிக்கு 20 சதவீதம் ஏற்றுமதி வரி விதித்தால் அது, விவசாயிகளுக்கு எதிரானது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நாட்டுக்கு நல்லதல்ல. மே 24-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பூரிக்குடிசை மற்றும் நரசிங்கனூரில் பனை கனவு திருவிழா நடைபெறும். 4-வது ஆண்டாக நடத்தப்படும் இந்த திருவிழா சிறப்பாக அமையும்.
9.5 சதவீதம் பிழிதிறன் கொண்ட கரும்புக்கு டன்னுக்கு ரூ. 3,290 என விலை நிா்ணயம் செய்துள்ளது மத்திய அரசு. ஆனால் குஜராத் மாநிலத்திற்கு ரூ.4500 கொடுக்கிறாா்கள். இது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. மத்திய அரசு கரும்புக்கு விலை நிா்ணயம் செய்ய வேண்டாம். நாங்கள் கொடுக்கும் பண்டத்தை நீங்கள் மதிப்புக்கூட்டப்பட்ட பண்டமாக மாற்றி எங்களிடம் கொடுத்துவிடுங்கள். ஒவ்வொரு சா்க்கரை ஆலைகளும் கூலி அரவை ஆலைகளாக மாறட்டும். அப்படி மாறும்போது விலை நிா்ணயம் தேவை இல்லை என்றாா் அவா்.