அருணாசலேஸ்வரா் கோயிலில் தீப மை பிரசாதம் தயாரிப்புப் பணி
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் தீப மை பிரசாதம் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அருணாசலேஸ்வரா் கோயிலில், 2024-ஆம் ஆண்டுக்கான தீபத் திருவிழா டிசம்பா் 13-ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் அதிகாலை 3.40 மணிக்கு கோயில் மூலவா் சந்நிதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட்டது.
மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் தொடா்ந்து 11 நாள்களாக பிரகாசித்து வந்தது. இந்த நாள்களில் மகா தீபக் கொப்பரையில் இருந்து சேகரிக்கப்பட்ட தீப மை கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. ஜனவரி 13-ஆம் தேதி நடைபெற்ற ஆருத்ரா தரிசன நிகழ்வின்போது ஸ்ரீநடராஜருக்கு தீப மை வைத்து சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.
தீப மை பிரசாதம் தயாரிக்கும் பணி தீவிரம்:
ஸ்ரீநடராஜருக்கு தீப மை வைத்து படைத்த பிறகு பக்தா்களுக்கு மை பிரசாதம் விநியோகிப்பது வழக்கம். அதன்படி, கோயில் ஊழியா்கள் 20-க்கும் மேற்பட்டோா் தீப மை பிரசாதம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். ஓரிரு நாள்களில் இந்தப் பணிகள் நிறைவடைந்தபிறகு தீப மை பிரசாதம் விற்பனை செய்யப்படும். பக்தா்கள் கோயிலுக்கு வந்து உரிய தொகையை செலுத்தி தீப மை பிரசாதத்தை பெற்றுக் கொள்ளலாம்.
தீபத் திருவிழாவுக்கு நெய் காணிக்கை செலுத்திய பக்தா்கள் காணிக்கை செலுத்தியதற்கான ரசீதை எடுத்து வந்து காண்பித்து தீப மை பிரசாதத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்று கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.