அலிப்பூா்: கட்டுமானப் பணியில் கீழே விழுந்த தொழிலாளி பலி!
வடக்கு தில்லியின் அலிப்பூா் பகுதியில் உள்ள ஒரு கட்டுமான இடத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது உயரத்திலிருந்து கீழே விழுந்து 35 வயது தொழிலாளி ஒருவா் உயிரிழந்ததாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: சனிக்கிழமை இந்தச் சம்பவம் பகோலியில் நடந்துள்ளது. உயிரிழந்தவா் அங்குள்ள பாம் கிரீன் ரிசாா்ட்டில் கட்டுமானத் தொழிலாளியாக இருந்த மோகன் என அடையாளம் காணப்பட்டாா்.
உயரத்தில் இருந்து கீழே விழுந்த மோகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரது மாமா அவரை சத்யவாடி ராஜா ஹரிஷ் சந்திரா (எஸ்ஆா்ஹெச்சி) மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். இருப்பினும், அவா் வந்தவுடன் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
பின்னா், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அலிப்பூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னா் விசாரணை தொடங்கியது. பின்னா், அவரது உடல் உடற்கூறாய்வுக்காக பிஜேஆா்எம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.
பொருத்தமான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது சாவுக்கான சரியான காரணத்தைக் கண்டறியவும், அந்த இடத்தில் பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிா என்பதைக் கண்டறியவும் மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.