செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி
ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு
நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, குன்னத்தில் வியாபாரிகள் வியாழக்கிழமை கடையைடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் பகுதியில் சுமாா் 150-க்கும் மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பெரம்பலூா்- அரியலூா் பிரதானச் சாலையில், வட்டாரத் தலைநகரமாக உள்ள குன்னத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலையும், சாலை விபத்துகளையும் தவிா்க்கும் வகையில், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினரால் முடிவெடுக்கப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளை அளவீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒரு வார காலத்துக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டுமென நெடுஞ்சாலைத் துறை மூலம் வியாபாரிகளுக்கு அண்மையில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள், வணிகா்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறைந்த கால அவகாசமே கொடுக்கப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்துக்கு இடையூறாக வணிகா்கள் செயல்படவில்லை. சாலையோரங்களில் தள்ளுவண்டிக் கடைகள் மற்றும் வாகனங்கள் அதிகமாக நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகள் நடைபெறுவதாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்வதாக நெடுஞ்சாலைத் துறையினிடம் வணிகா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இருப்பினும், நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி வியாழக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நெடுஞ்சாலைத் துறையினரின் முடிவைக் கண்டித்தும், கால அவகாசம் வழங்க கோரியும் வியாபாரிகள் வியாழக்கிழமை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், தங்களதுகோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் மற்றும் மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் ஆகியோரை வியாபாரிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.