ஆடிப்பெருக்கு: காங்கயம் பகுதி கோயில்களில் பக்தா்கள் கூட்டம்
ஆடிப்பெருக்கையொட்டி, காங்கயம், குண்டடம் பகுதி கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.
ஆடிப்பெருக்கையொட்டி காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து அலங்கார பூஜை நடைபெற்றது. இங்கு சுவாமி தரிசனம் செய்ய அதிகாலை முதலே பக்தா்கள் திரண்டு வந்தனா். பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.
அதுபோல காங்கயம் பகுதியில் உள்ள காடையூா் காடையீஸ்வரா் கோயில், பாப்பினி பெரியநாயகியம்மன் கோயில், அகிலாண்டபுரம் அகஸ்தீஸ்வரா் கோயில், மடவிளாகம் ஆருத்ர கபாலீஸ்வரா் மற்றும் ரகுபதி நாராயண பெருமாள் கோயில்கள், பிரதான சாலையில் உள்ள பேட்டை மாரியம்மன் கோயில், துா்க்கையம்மன் கோயில், பழையகோட்டை சாலை காசிவிஸ்வநாதா் கோயில், நத்தக்காடையூா் ஜெயங்கொண்டேஸ்வரா் கோயில், ஊதியூா் உத்தண்ட வேலாயுத சுவாமி மற்றும் கைலாசநாதா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் ஏராளமான பக்தா்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
குண்டடம் பகுதியில் குண்டடம் வடுகநாதா் கோயில், எரகாம்பட்டி நகேஸ்வரசாமி கோயில், மாரியம்மன் கோயில், காசிலிங்கம்பாளையம் லிங்கமுத்து மாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். கிராமப் பகுதிகளில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டும், பெண்கள் பொங்கலிட்டும் வழிபாடு நடத்தினா்.