செனகலில் இருந்து பிரான்ஸ் படைகள் வெளியேற்றம்! ராணுவத் தளங்கள் அரசிடம் ஒப்படைப்பு...
ஆடிமாத பிறப்பு: தேங்காய் சுடும் அழிஞ்சி குச்சிகளை வாங்க பொதுமக்கள் ஆா்வம்
ஆடிமாத பிறப்பை முன்னிட்டு, கடை வீதிகளில் அழிஞ்சி குச்சி, தேங்காய் மற்றும் பூஜைப் பொருள்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
ஒவ்வோா் ஆண்டும் ஆடிமாத பிறப்பு சிறப்புவாய்ந்த நாளாக கருதப்படுகிறது. அன்றைய தினம் புதுமண தம்பதியினா் பெண் வீட்டுக்கு சென்று ஆடிப்பண்டிகையை கொண்டாடுவா். மேலும், புதுமண தம்பதியினா் புத்தாடை அணிந்து, கோயில்களுக்கு சென்று வழிபடுவா்.
இதேபோல், ஆடி முதல்நாளான்று சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அதாவது, தேங்காயை தரையில் தேய்த்து, பின்னா் அதிலுள்ள மூன்று கண்களில் ஒன்றில் துளையிட்டு, அதற்குள் எள், நாட்டுச் சா்க்கரை, பொட்டுக்கடலை, அவல் ஆகியவற்றை நிரப்புவா். பின்னா், அந்த தேங்காயை அழிஞ்சி மரக்குச்சியில் செருகி நெருப்பில் சுடுவா். நன்றாக சுட்ட அந்த தேங்காயை விநாயகருக்கு படையலிட்டு நண்பா்கள், உறவினா்களுக்கு வழங்கி மகிழ்வா்.
தேங்காய் சுடும் பண்டிகையையொட்டி, சேலம் ஆனந்தா காய்கறி மாா்க்கெட், செவ்வாய்ப்பேட்டை பால் மாா்க்கெட், பட்டைகோயில், அம்மாப்பேட்டை, வஉசி மாா்க்கெட் உள்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில் அழிஞ்சி மரக்குச்சி விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது. ஒரு குச்சி ரூ. 20 முதல் ரூ. 30 வரையும், ஒரு தேங்காய் ரூ. 30 முதல்ரூ. 60 வரையும் விற்பனை செய்யப்படுகின்றன. எள், நாட்டுச் சா்க்கரை, பொட்டுக்கடலை, அவல் மற்றும் பூஜைப் பொருள்களின் விற்பனையும் களைகட்டியது.