படகுகளில் தவெக என்று இருந்தால் மானியம் வழங்க மறுப்பதா? - விஜய் கண்டனம்
ஆணவ (தற்)கொலை... அழுந்திக் கிடக்கிற ஆணவங்களை தலைதூக்க செய்யுமே..!
மகள் வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்ததால், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட நாமக்கல் தம்பதியின் செய்தியை வாசிக்கையில், இரண்டு வகையில் மனம் கனத்துக்கொண்டிருக்கிறது. முதலாவதாக, இழந்துவிட்டால் திரும்ப கிடைக்காத உயிரை, தற்கொலையில் இழப்பதும், அதை 'ரயில் முன் பாய்ந்து கொடூரமாக' இழந்திருப்பதும் மிகுந்த வேதனையளிக்கிறது. இரண்டாவதாக, மகள் வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்தக் காரணத்துக்காக தற்கொலை செய்துகொள்ளுவதெல்லாம், பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளவே முடியாத சிறுபிள்ளைத்தனம்.

நம் சமூகத்தில் எல்லா காலத்திலும் காதலுக்கு மதம், சாதி, அதற்குள் பல உட்பிரிவுகள் என பல எதிரிகள் உண்டு. காதல் லேசாக எட்டிப்பார்த்தாலும், சாதியோ அல்லது மதமோ அவர்களை ஒற்றையாகவோ, ஜோடியாகவோ மண்ணுக்குள் மூடிவிடும். அதுமட்டுமா... 'நம்ம சாதியில எங்ககிட்ட இல்லாதது அந்த சாதி ஆம்பளைகிட்ட இருக்கா' என்று வன்புணர்வுக்கும் துணிந்த மாக்கள் இருந்த, இருக்கிற மண் இது.
கல்வி வெளிச்சம் நம் வீடுகளுக்குள் வேக வேக பாயத்தொடங்கிய 1970-களிலும், 80-களிலும்கூட ’காதலிப்பது பெருங்குற்றம்’, ’அப்படியே காதலித்தாலும் தோல்வியே முடிவு’ என்கிற சூழல்தான் நகரங்களிலும்கூட இருந்து வந்தது. சினிமாக்களில்கூட, காதலித்தப்பெண்ணை நாயகன் அம்மாவுக்கு அறிமுகம் செய்யும்போது, பெரும்பாலும் அவள் அவனுக்கு முறைப்பெண்ணாக இருப்பாள். ஆக, வெள்ளித்திரையின் கற்பனையில்கூட சாதிக்குள்தான் திருமணம்.

மாற்றம் ஒன்றே மாறாதது. சமூகமும், காதலும்கூட இதற்குள்தானே அடக்கம். ஆங்காங்கே பெற்றோர் சம்மதத்துடனோ அல்லது இல்லாமலோ காதல் திருமணங்கள் நடக்க ஆரம்பித்தன. ஆனால், காதல் திருமணங்களை பல பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளும் இன்றைய நிலைக்கு வருவதற்குள் இளம் தலைமுறையினர் பட்டப்பாடு கொஞ்ச நஞ்சமல்ல... பெண்ணைப் பொறுத்தவரை அதுவரை பாசமாக வளர்த்த பெற்றோர் எதிரிபோல நிற்பார்கள். சில குடும்பங்களில் எதிரிகளாகவே மாறி நிற்பார்கள். தங்கள் வீட்டில் வாழ்ந்த ஒரு பெண்ணுக்கு வருடந்தோறும் பூவும் புடவையும் வைத்து வணங்கி வரும் ஏதாவதொரு குடும்பத்திடம் கேட்டுப்பாருங்கள். ஓர் ஆணவக்கொலை நடந்தேறிய மண்மேடு ரகசியம் ஒன்றை பகிர்வார்கள்.
ஆணைப்பொறுத்தவரை, 'படிக்கும்வரை காதலை மனதுக்குள் வளர்த்து', 'காதலித்தவளை கரம்பிடிக்க படிப்பை முடித்தவுடனே வேலைக்கு ஓடி', 'பெற்றோரிடம் போராடி', 'காதலித்தவளின் வீட்டாரிடம் போராடி', 'பல நேரங்களில் அடியுதை வாங்கி'... என்று இப்படியெல்லாம் போராடினாலும் 'அவங்க வேற ஆளுங்க; நாம வேற ஆளுங்க' என்கிற என்கிற ஒற்றை வார்த்தையிலும், 'நீ இப்படி வேற சாதியில கல்யாணம் செஞ்சுகிட்டா உன்கூடப் பிறந்தவளை யார் கட்டுவா' என்கிற எமோஷனல் பிளாக்மெயிலிலும் ஒரு காதல் கத்தியின்றி, ரத்தமின்றி கொன்று புதைக்கப்படும்.
உள்ளங்கள் இணைந்து சாதித்ததையும், கணவனோ/மனைவியோ அனுசரித்ததால் நீண்ட திருமணங்களையும், ஒரே சமூக திருமணத்துக்கான நற்சான்றிதழாக தயவுசெய்து எடுத்துக்கொள்ளாதீர்கள்.
பெண் கல்வியும், அவளுடைய பொருளாதார சுதந்திரமும் எத்தனையோ அதிசயங்களை நம் சமூகத்தில் நிகழ்த்திக் காட்டின. அவற்றில் ஒன்றுதான், சாதி, மதம் தாண்டிய காதல் திருமணங்கள். அதற்காக, 'இப்போ யார் சார் சாதியெல்லாம் பார்க்கிறாங்க' என்று கண்மூடித்தனமாக இருந்துவிட முடியாது என்பதை, அவ்வப்போது நடக்கிற ஆணவக்கொலைகள், 'அந்த ஆயுதம் இன்னமும் நம் சமூகத்தின் தலைக்கு மேலாக தொங்கிக்கொண்டுதான் இருக்கிறது' என்பதை எச்சரித்துக்கொண்டே இருக்கிறது.
'சாதி, மதம் தாண்டிய திருமணங்கள் இயல்பாகிக்கொண்டே வருகிறது; ஆனால், இல்லை' என்கிற குழப்பமான கட்டத்தில்தான் இன்றைக்கு நம் சமூகம் இருக்கிறது. எத்தனையோ தலைவர்களும், போராளிகளும் நம் மனங்களுக்குள் கடத்திய 'சாதி, பேதமற்ற' ஜோதியை இளைய தலைமுறையினர் வெற்றிகரமாக ஏந்திக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிற இந்த நேரத்தில், நாமக்கல் தம்பதியரின் தற்கொலை முடிவு, சாதிக்கூடையில் இருந்து வெளிவர முயற்சி செய்கிற பலருடைய கால்களையும் இந்நேரம் பின்னுக்கு இழுக்க ஆரம்பித்திருக்கும்.
இவர்களை உதாரணம் காட்டி, பல பெற்றோர்களின் மனங்களுக்குள் அழுந்திக்கிடக்கிற ஆணவங்கள் மறுபடியும் தலைதூக்க முயற்சி செய்யும். அந்த முயற்சி நிறைவேற, தற்கொலை மிரட்டலையே கையில் எடுக்கும். இறந்தவர்களை குறை சொல்வது மனிதத்தன்மையோ, நாகரீகமோ அல்ல தான். இருந்தாலும் உங்கள் மரணம் தந்த ஆற்றாமையில் சொல்கிறோம், தவறான முன்னுதாரணம் ஆகி விட்டீர்கள்.

நாமக்கல் தம்பதியரின் விஷயத்தில், இவர்களுடைய மகள் நன்கு படித்தவர்; அவர் விரும்பியவரோ தங்கள் மகளுக்கு சமமானவராக இல்லை என்கிற காரணத்தால், தற்கொலை முடிவை எடுத்ததாக சொல்லப்படுகிறது. மகள் அந்த நபரைத் திருமணம் செய்தால் அவளுடைய வாழ்க்கை நன்றாக இருக்காதோ என்கிற வேதனையில், இப்படிப்பட்ட விபரீத முடிவை எடுத்திருக்கலாம். தங்களுடைய மரணம் மகளுக்கு குற்றவுணர்ச்சி ஏற்படுத்தி, அந்தக் காதலை கைவிடச் செய்யும் என்பதால்கூட தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம். உங்களைப்போன்ற எண்ணம் கொண்டவர்களுக்கு ஒரு சிறு விளக்கம்.
ஒரே மதத்துக்குள், ஒரே சாதிக்குள் திருமணம் செய்துவைத்தாலும், இரண்டு உள்ளங்கள் இணைந்தால் மட்டுமே அந்தத் திருமணம் நிலைபெறும். உள்ளங்கள் இணைந்து சாதித்ததையும், கணவனோ/மனைவியோ அனுசரித்ததால் நீண்ட திருமணங்களையும், ஒரே சமூக திருமணத்துக்கான நற்சான்றிதழாக தயவுசெய்து எடுத்துக்கொள்ளாதீர்கள்.

அரை நூற்றாண்டு உலக அனுபவம் கொண்ட பெற்றோர்கள் பார்த்து செய்கிற திருமணங்களிலும் எத்தனையோ பிரச்னைகள் இருக்கையில், கால் நூற்றாண்டு உலகம் அனுபவம் கொண்ட இளையவர்கள் செய்கிற காதல் திருமணங்களிலும் பிரச்னைகள், பிரிவுகள் வரவே செய்யும். 'இதுக்குத்தான் நாங்க சொல்ற மாப்பிள்ளையை/பொண்ணைக் கட்டியிருந்தா' என்று குத்திக்காட்டாமல், உங்கள் அனுபவம் என்னும் கையை உதவிக்கு நீட்டுங்கள் போதும்.
பிள்ளைகளை அழிக்கிற ஆணவக்கொலையோ, பெற்றோரை அழிக்கிற ஆணவ தற்கொலையோ... இரண்டுமே நம் குடும்ப வேர்களுக்கு நல்லதல்ல..!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...