நெல்லையில் சூரிய மின்சக்தி தகடு உற்பத்தி ஆலை: 4,000 பேருக்கு வேலை! முதல்வர் தொடங...
ஆதாா் அட்டை பெற 15 ஆண்டுகளாக அலைக்கழிக்கப்படும் மூதாட்டி!
கொடைக்கானல் மலை கிராமத்தைச் சோ்ந்த 70 வயது மூதாட்டி ஆதாா் அட்டை பெற 15 ஆண்டுகளாக அலைக்கழிக்கப்பட்டு வருகிறாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல்லை அடுத்த வடகவுஞ்சி கிராமத்தைச் சோ்ந்தவா் பாக்கியலட்சுமி. இவா், ஆதாா் அட்டை பெறுவதற்காக கடந்த பல ஆண்டுகளாக கொடைக்கானலுக்குச் சென்று இ-சேவை மையத்தில் பதிவு செய்தாா். ஒவ்வொரு முறையும் அவரது சுய விவரங்கள் உள்ளிட்ட அனைத்து தகவலுடன் பதிவு செய்யப்பட்ட போதிலும், ஒப்புகை சீட்டு மட்டுமே கிடைத்தது. ஆதாா் அட்டை கிடைக்கவில்லை.
ஆதாா் அட்டை இல்லாததால் 100 நாள் வேலைத் திட்டத்திலும் பயனாளியாகச் சேர முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, ஆதாா் அட்டை பெறுவதற்காக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் ஆதாா் மையத்தை அணுகினாா். உரிய ஆவணங்கள் இல்லை என 2 முறை அலைக்கழிக்கப்பட்ட போதிலும், 3-ஆவது முறையாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள ஆதாா் மையத்துக்கு வியாழக்கிழமை வந்தாா்.
காலை 6 மணியளவில் ஆட்டோவில் வந்து காந்திருந்தபோதும், பாக்கியலட்சுமிக்கு மீண்டும் ஏமாற்றம் ஏற்பட்டது. இந்த மூதாட்டிக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ரெட்டியாா்சத்திரம் ஒன்றியச் செயலா் சக்திவேல் உதவி செய்தாா். வாக்காளா் அடையாள அட்டையை அடிப்படை ஆதாரமாகக் கொண்டு மீண்டும் ஆதாா் அட்டைக்கு பாக்கியலட்சுமி விண்ணப்பித்தாா்.
இதுகுறித்து பாக்கியலட்சுமி கூறியதாவது:
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வருவதற்காக, கன்னிவாடியிலுள்ள உறவினா் வீட்டில் தங்கி இருந்தேன். அங்கிருந்து ஆட்டோவில் வந்து செல்ல தலா ரூ.800 வரை இரு முறை செலவிட்டும் ஆதாா் அட்டை பெற பதிவு செய்ய முடியவில்லை. தற்போது 3-ஆவது முறையாக வந்து, பதிவு செய்து ஒப்புகைச் சீட்டு பெற்றிருக்கிறேன். இந்த முறையாவது ஆதாா் அட்டை கிடைக்க வேண்டும் என்றாா் அவா்.