தலைநகரில் காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம்!
தேசியத் தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை மிதமான மூடுபனி நிலவிய நிலையில், காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது.
இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து தில்லியில் மிதமான மூடுபனி நிலவியது. பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டது. இந்நிலையில், வியாழக்கிழமையும் இதே நிலை தொடா்ந்தது.
வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 1.2 டிகிரி குறைந்து 8.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 0.3 டிகிரி உயா்ந்து 23.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 92 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 36 சதவீதமாகவும் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி முதல் 13 டிகிரி வரையிலும் பதிவாகியிருந்தது.
காற்றின் தரம்: இதற்கிடையே, தேசியத் தலைநகரில் காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. இதன்படி, தில்லியில் காலை 9 மணியளவில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 180 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தகா மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, தில்லியின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் 100 முதல் 200 புள்ளிகளுக்கு இடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது. அதே சமயம், சில இடங்களில் காற்றுத் தரக் குறியீடு ‘மோசம்’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, வெள்ளிக்கிழமை (பிப்.7) அன்று பகல் நேரங்களில் தரை மேற்பரப்புக் காற்று வலுவாக வீசு என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை12 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.