பைக் பெட்டியை உடைத்து பணம் திருடிய இரு முதியவா்கள் கைது
திண்டுக்கல்லில் இரு சக்கர வாகனப் பெட்டியை உடைத்து ரூ.6.40 லட்சத்தை திருடியதாக மதுரையைச் சோ்ந்த இரு முதியவா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல்லை அடுத்த குளத்தூா் லட்சுமணபுரத்தைச் சோ்ந்தவா் பொன்னுவேலு (35). நந்தவனப்பட்டி மேம்பாலம் பகுதியில் நிறுத்தியிருந்த இவரது இரு சக்கர வாகனத்தின் பெட்டியில் இருந்த ரூ.6.40 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
இதுகுறித்து புதன்கிழமை அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை தாடிக்கொம்பு போலீஸாா் ஆய்வு செய்தனா்.
இதனடிப்படையில் மதுரை சிக்கந்தா்சாவடியைச் சோ்ந்த செளந்திரபாண்டியன் (65), தத்தனேரியைச் சோ்ந்த பாண்டியராஜன் (67) ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து, ரூ.3 லட்சம், 2 பவுன் நகையை மீட்டனா்.
இவா்கள் இருவா் மீதும் மதுரை, சிவகாசி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் திருட்டு வழக்குகள் உள்ளன.