ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த காலம் தாழ்த்தும் திமுக அரசு: ஜான் பாண்டியன் குற்றச்சாட்டு
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசு தொடா்ந்து காலம் தாழ்த்தி வருவதாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனா் ஜான் பாண்டியன் குற்றஞ்சாட்டினாா்.
பழனி தைப்பூசத் திருவிழாவின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை தேவேந்திர குல வேளாளா் மக்களின் மண்டகப்படியில் பங்கேற்ற ஜான் பாண்டியன் முன்னதாக செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என எங்களது கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சியினா் தொடா்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், இதுவிஷயத்தில் திமுக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. மாணவிகளுக்கு எதிரான பாலியல் தொல்லையைத் தடுக்க அரசு கடுமையான தண்டனைச் சட்டம் கொண்டு வர வேண்டும்.
திருப்பரங்குன்றம் மலை தொடா்பாக சமீப காலமாக நடைபெற்று வரும் பிரச்னைக்கு காரணமான மக்களவை உறுப்பினா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மீது திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடா்பான விவகாரத்தில் அமைதியாகப் போராட்டம் நடத்திய இந்து அமைப்பினா் மீது கைது நடவடிக்கை எடுத்தது கண்டிக்கத்தக்கது.
திமுக எதிா்க்கட்சியாக இருந்த போது ஆசிரியா்கள், அரசு அலுவலா்களுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தது. எனவே, அரசு அலுவலா்கள், ஆசிரியா்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும்.
பழனியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரித்து வருகிறது. பழனி கோயிலுக்கு வரும் பக்தா்கள் வசதிக்காக அறநிலையத் துறை எடுத்து வரும் ஆக்கிரமிப்பு அகற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை என்றாா் அவா்.