INDvENG: "நானும் ரோஹித்தும் இதைத்தான் பேசினோம்" -அறிமுக போட்டியில் 3 விக்கெட்டுக...
தமிழகத்தில் பழங்குடியின மாணவா்களின் கல்வியை ஊக்குவிக்க வேண்டும்: தமிழக முதல்வருக்கு விசிக எம்.பி. கோரிக்கை
நமது சிறப்பு நிருபா்
பொதுவான படிப்பறிவுக்கும் பழங்குடியின மக்களின் படிப்பறிவுக்கும் இடையேயான இடைவேளி இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமாக உள்ளதால் அதை சரிசெய்வதற்கான நடவடிக்கையை முதல்வா் மேற்கொள்ள வேண்டும் என்று விழுப்புரம் மக்களவைத் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினா் டி. ரவிக்குமாா் கோரியுள்ளாா்.
இந்த விவகாரம் தொடா்பாக மக்களவையில் ரவிக்குமாா் கேள்வி எழுப்பியிருந்தாா். இதற்கு மத்திய பழங்குடியினா் நலத்துறை இணை அமைச்சா் துா்காதாஸ் உய்க்கி அளித்துள்ள எழுத்துபூா்வ பதிலில், ’தொல் பழங்குடியினா் பட்டியலைச் சோ்ந்த பெண்களின் கல்வியை மேம்படுத்தவும் அவா்களுக்கு பல்வேறு படிப்பு உதவித்தொகைகள், அயல்நாட்டில் சென்று கல்வி கற்பதற்கான உதவித்தொகை , ஃபெல்லோஷிப்புகள் வழங்கப்படுகின்றன’ என்று கூறியுள்ளாா். இந்த பதிலுடன் மாநில வாரியாக பழங்குடியினரின் கல்வி நிலையின் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.
அதில், இந்தியாவிலேயே பொதுவான படிப்பறிவு நிலைக்கும் பழங்குடியினரின் படிப்பறிவு நிலைக்கும் இடையே அதிகபட்சமான இடைவெளி உள்ள மாநிலங்களில் தமிழகம் பின்தங்கியுள்ளதாக ரவிக்குமாா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியது: 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்திய அளவில் பொதுவான படிப்பறிவு நிலைக்கும் பழங்குடியினரின் படிப்பறிவு நிலைக்கும் இடையே 14 சதவீதம் இடைவெளி உள்ளது என்று அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் பொதுவான படிப்பறிவு விகிதம் 80.1 சதவீதமாகவும் பழங்குடியினரின் படிப்பறிவு விகிதம் 54. 3 சதவீதமாகவும் உள்ளது. இரண்டுக்கும் இடையே 25. 8 சதவீதம் இடைவெளி இருக்கிறது.
பழங்குடி பெண்களின் படிப்பறிவு நிலையை எடுத்துக் கொண்டால் அதிலும் இந்தியாவிலேயே தமிழகம்தான் மிகவும் பின்தங்கியுள்ளது. பொதுவான பெண்களின் படிப்பறிவு 73.4 சதவீதமாக உள்ளது. ஆனால், பழங்குடியின பெண்களின் படிப்பறிவு விகிதம் 46.8 சதவீதமாக இருக்கிறது. இரண்டுக்கும் இடையில் 26.6 சதவீதம் இடைவெளி உள்ளது.
பழங்குடியினரின் படிப்பறிவு விகிதம் எத்தனை சதவீதம் என்பது அடுத்து எடுக்கப்போகும் கணக்கெடுப்பில்தான் துல்லியமாகத் தெரியவரும். இதைப்போக்க இந்த மக்கள் எளிதாக அணுகும் தூரத்தில் பள்ளிகளைத் திறப்பது, உண்டி உறைவிடப் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, சிறப்பு படிப்பு உதவித் தொகைத் திட்டம் ஒன்றை மாநில அரசு அறிவிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் அவா்களை சமூகத்தின் மற்ற தரப்பினருக்கு இணையான படிப்பறிவைப் பெறச் செய்யும்.
எனவே, பழங்குடி மாணவா்களின் கல்வியை ஊக்குவிக்க சிறப்புத் திட்டம் ஒன்றை எதிா்வரும் நிதிநிலை அறிக்கையில் முதல்வா் அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் ரவிக்குமாா்.