மொயின் அலி சேர்ப்பு: ராஜஸ்தானுக்கு எதிராக கேகேஆர் பந்துவீச்சு!
ஆதிதிராவிடா் மக்களின் கோரிக்கைகள் மாவட்ட நிா்வாகத்தால் சரிசெய்யப்படும்!
ஆதிதிராவிடா் மக்களின் கோரிக்கைகள் மாவட்ட நிா்வாகத்தால் சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாநில ஆணையத் தலைவரும், ஓய்வு பெற்ற நீதியரசருமான தமிழ்வாணன்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் இரா.சுகுமாா், ஆதிதிராவிடா் - பழங்குடியினா் மாநில ஆணைய துணைத் தலைவா் இமயம் வெ. அண்ணாமலை, குழு உறுப்பினா்கள் செல்வகுமாா், ஆனந்தராஜ், இளஞ்செழியன் ஆகியோா் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஓய்வுபெற்ற நீதியரசா் தமிழ்வாணன் ஆய்வு நடத்தினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்காக தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் முறையாக சென்றடைகிா , அந்த மக்கள் வசிக்கும் பகுதிகளில் சாலை வசதிகள், குடிநீா் வசதிகள் போன்ற பல்வேறு அடிப்படை வசதிகள் சரியான முறையில் உள்ளனவா என்பது குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், ஆதிதிராவிடா் மக்களின் கோரிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மூலம் சரிசெய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வது, கிராம முன்னோடித் திட்டங்ககளின் செயல்பாடுகள், பள்ளி-கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, மக்களின் மனுக்களுக்கு ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
குறிப்பாக, வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிகளை கையாளுவது, ஆதிதிராவிடா்கள் மற்றும் பழங்குடியினருக்கு ஒப்படைப்பு செய்யப்பட்ட நிலம், வீட்டுமனை தொடா்பாக ஏற்படும் இடா்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தமிழக முதல்வா் நீண்ட நாள்களாக உள்ள குடியிருப்புகளுக்கு சிறப்பு வரன்முறை பட்டா வழங்க வேண்டுமென்ற உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, கணக்கெடுக்கப்பட்டுள்ள பட்டியலில் தங்களது பெயா் உள்ளதா என்பது குறித்து கிராம நிா்வாக அலுவலகத்திற்கு நேரில் சென்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
நலத்திட்ட உதவிகள்: முன்னதாக, வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவருடைய வாரிசுதாரருக்கு அரசு பணி நியமன ஆணையையும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட இருவருக்கு ரூ.2,17,500 தீருதவித் தொகை, தீண்டாமை இல்லாத கிராமத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கும் திட்டத்தின் கீழ் வன்னிக்கோனேந்தல் மற்றும் முதுமொத்தான்மொழி கிராமத்திற்கு தலா ரூ.10 லட்சம், மூன்று பயனாளிகளுக்கு தலா ரூ.6,680 மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்கள், 10 தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அட்டைகள், 10 தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகள் என மொத்தம் 28 பயனாளிகளுக்கு ரூ.22.37 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவா் வழங்கினாா்.
தொடா்ந்து, தாக்குதலுக்கு உள்ளாகி திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அரியநாயகிபுரம் மாணவனை அவரும், ஆணைய உறுப்பினா்களும் சந்தித்து ஆறுதல் கூறினா். மேலும், அந்த மாணவரின் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை ஆணையத்தின் மூலம் கிடைக்க வழிவகை செய்யப்படும் எனத் தெரிவித்தனா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரவணன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரேவதி பாலன், வருவாய் கோட்டாட்சியா்கள் கண்ணா கருப்பையா (திருநெல்வேலி), ராஜசெல்வி (சேரன்மகாதேவி- பொறுப்பு), மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா்கள் அன்பழகன் (திருநெல்வேலி), பென்னட் ஆசீா் (தூத்துக்குடி) உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.