ஆந்திரா: `பறவைக் காய்ச்சல் பாதிப்பு' - சமைக்காத கோழிக்கறியை சாப்பிட்ட 2 வயது சிறுமி உயிரிழப்பு
ஆந்திராவில் பறவைக் காய்ச்சல் தொற்று காணப்படுகிறது. அங்குள்ள பல்நாடு மாவட்டத்தில் நரஸ்ராவ்பேட் என்ற நகரத்தில் வசிக்கும் இரண்டு வயது சிறுமிக்கு அவளது பெற்றோர் சமைப்பதற்காக வாங்கி வந்த கோழி கறியில் ஒரு சிறிய துண்டை எடுத்து சமைக்காமல் அப்படியே சிறுமிக்கு சாப்பிட கொடுத்தனர்.
சிறுமியும் அதனை சாப்பிட்டாள். இதையடுத்து சிறுமிக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அச்சிறுமி கடந்த மாதம் 4-ம் தேதி மங்களகிரியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
சிறுமிக்கு பறவைக்காய்ச்சல் தொற்று இருப்பது சோதனையில் தெரிய வந்தது. சிறுமி சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனாள்.
சிறுமி இறப்பதற்கு முன்பு அவரது எச்சம் மாதிரி எடுக்கப்பட்டு டெல்லி மருத்துவ ஆராய்ச்சி மையம் மற்றும் புனே ஆராய்ச்சி மைத்தில் சோதனை செய்யப்பட்டது. இரண்டு சோதனையிலும் பறவைக்காய்ச்சல் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டு முக்கிய இடங்களில் காய்ச்சல் சோதனைகளை நடத்தும்படி உத்தரவிடப்பட்டு இருப்பதாக மாநில சுகாதாரத்துறை செயலாளர் கிருஷ்ண பாபு தெரிவித்தார்.
மேலும் மக்கள் அச்சம் அடைய தேவையில்லை என்றும், வழக்கத்திற்கு மாறாக எதாவது அறிகுறிகள் தென்பட்டால் அது குறித்து உடனே பொதுமக்கள் தகவல் கொடுக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து கூறுகையில், ''இதற்கு முன்பும் இதே போன்று சமைக்காத கோழிக்கறியை சாப்பிட கொடுத்து இருக்கிறோம். அப்போது எந்த வித பிரச்னையும் ஏற்படவில்லை. ஆனால் இப்போது மூச்சுவிடுவதில் சிரமம், வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற பிரச்னை ஏற்பட்டது'' என்று தெரிவித்தனர்.
அதே வீட்டில் கோழிக்கறியை சமைத்து சாப்பிட்டவர்களுக்கு எந்த வித பிரச்னையும் ஏற்படவில்லை. சிறுமியின் குடும்பத்தினர் கோழிக்கறி வாங்கிய கடையில் கோழிக்கறி வாங்கியவர்களின் மாதிரியும் எடுத்து சோதனை செய்து பார்க்கப்பட்டது. அவர்களுக்கும் பறவைக்காய்ச்சல் தொற்று ஏற்படவில்லை என்று தெரிய வந்தது.

பொதுமக்கள் கோழிக்கறி மற்றும் முட்டையை நன்றாக வேகவைத்து சாப்பிடும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். சமீபத்தில்தான் ஆந்திரா அரசு பறவைக் காய்ச்சல் இல்லாத மாநிலமாக அறிவித்தது. ஆனால் இப்போது சிறுமி பறவைக்காய்ச்சலுக்கு பலியாகி இருக்கிறார்.
இதையடுத்து அனைத்து கோழிப்பண்ணைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இதற்கு முன்பு 2021-ம் ஆண்டு ஹரியானாவில் முதல் முறையாக பறவைக்காய்ச்சலுக்கு மனிதர்கள் உயிரிழப்பு நடந்தது. அதன் பிறகு இப்போதுதான் ஆந்திராவில் நிகழ்ந்துள்ளது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
