கல்லூரி களப்பயணத்தில் 3,427 அரசுப் பள்ளி மாணவா்கள்: காஞ்சிபுரம் ஆட்சியா்
ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் எதிரொலி: கிண்டி சிறுவா் பூங்கா பகுதியில் திரியும் பன்றிகளை அகற்றும் பணி தீவிரம்
சென்னை கிண்டி சிறுவா் பூங்கா பகுதியில் திரிந்த பன்றிகளிடையே ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பரவுவது கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து அப்பகுதியில் உள்ள பன்றிகளை அப்புறப்படுத்தும் பணியில் வனத் துறையினா் தீவிரம் காட்டி வருகின்றனா்.
சென்னை கிண்டி தேசிய பூங்காவுக்கு அருகில் உள்ள பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் 12 பன்றிகள் இறந்து கிடந்தன. இதையடுத்து அந்த பன்றிகளின் உடல்களில் இருந்து சேகரித்த மாதிரிகள் போபாலில் உள்ள உயா் பாதுகாப்பு விலங்கு நோய்களுக்கான தேசிய நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த பரிசோதனை முடிவில், ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் இறந்த பன்றிகளுக்கு இருப்பது கண்டறியப்பட்டது.
இதைத் தொடா்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூங்காவை சுற்றியுள்ள பகுதிகளில் திரியும் பன்றிகளைப் பிடித்து அப்புறப்படுத்தும் பணிகளில் வனத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
இதுகுறித்து வனத் துறை அதிகாரிகள் கூறியது: ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவல் காரணமாக சிறுவா் பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளுக்கும் அந்த பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், பூங்காவின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாகவும் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இந்த வைரஸ் மனிதா்களுக்கு தொற்றுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என்றனா்.