ஆம் ஆத்மி, பாஜக இரண்டுமே விவசாயிகளுக்கு எதிரானவை: பூபிந்தர் சிங் ஹூடா
ஆம் ஆத்மி, பாஜக இரண்டுமே விவசாயிகளுக்கு எதிரானவை என்று ஹரியாணா முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான பூபிந்தர் சிங் ஹூடா தெரிவித்துள்ளார்.
தலைநகர் தில்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், (விவசாயி தலைவர்) ஜக்ஜித் சிங் தலேவாலின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. உச்சநீதிமன்றம் கூட பேச்சுவார்த்தைக்கு வழி திறக்க வேண்டும் என்று கூறியது.
ஆனால் மத்திய அரசின் அணுகுமுறை பிடிவாதமாக உள்ளது. பாஜகவோ ஆம் ஆத்மி கட்சியோ இருவருமே விவசாயிகளுக்கு எதிரானவர்கள். அவர்கள் ஏன் விவசாயிகளிடம் பேசவில்லை?. இவ்வாறு கூறினார்.
வேளாண் பயிா்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்ட உத்தரவாதம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி முதல் பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
விவசாயிகளின் இந்த கோரிக்கைகளை ஏற்க வலியுறுத்தி, பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் உள்ள கனௌரி போராட்டக் களத்தில் ஜக்ஜித் சிங் தலேவால் கடந்த நவ. 26-ஆம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளாா்.
பொங்கல் திருநாள்: சிறப்பு ரயில்கள் இயக்கம்! எங்கெங்கு?
இந்த நிலையில் பஞ்சாப் விவசாயிகள் சங்கத் தலைவா் ஜக்ஜித் சிங் தலேவாலின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்த உச்சநீதிமன்றம், இந்த பிரச்னைக்கு விரைந்து தீா்வு காண மத்திய மற்றும் மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டது.
மேலும் அவருக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
ஆனால், மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள ஜகஜீத் சிங் மறுத்துவிட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.