ஆள் கடத்தலில் ஈடுபட்ட கிளர்ச்சியாளர்கள் கைது! ஆயுதங்கள் பறிமுதல்!
மணிப்பூர் மாநிலத்தின் பிஷ்னுப்பூர், தௌபல் மற்றும் கிழக்கு இம்பால் மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட இயக்கங்களைச் சேர்ந்த 4 கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிஷ்னுப்பூரின் நம்போல் பகுதியைச் சேர்ந்த லைதொஜம் திலிப் சிங் (வயது 47) என்ற நபர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, இந்தக் கடத்தலில் ஈடுபட்ட யுனைட்டெட் லிபரேஷன் ஃப்ரொண்ட் எனும் அமைப்பைச் சேர்ந்த 2 பேரை நேற்று (ஏப்.4) கைது செய்த போலீஸார் அவர்கள் கட்டுப்பாட்டிலிருந்து திலிப் சிங்கை பத்திரமாக மீட்டுள்ளனர்.
இதேபோல், தௌபல் மாவட்டத்தில் பணப்பறிப்பில் ஈடுபட்டு வந்த தடைசெய்யப்பட்ட காங்லெய்பாக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கிளர்ச்சியாளர் ஒருவரை கைது செய்த பாதுகாப்புப் படையினர் அவரிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், அதே அமைப்பைச் சேர்ந்த துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த மற்றொரு நபர் கிழக்கு இம்பால் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பிஷ்னுப்பூர் மாவட்டத்தின் லைசோய் மலைப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட சோதனையில் 4 துப்பாக்கிகள் அதன் குண்டுகள் மற்றும் கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கர்நாடகம்: லாரி மீது பேருந்து மோதி 5 பேர் பலி