ஆழித்தோ் கட்டுமானப் பணிகள்: வேளாக்குறிச்சி ஆதீனம் ஆய்வு
திருவாரூரில் நடைபெற்று வரும் ஆழித்தோ் கட்டுமானப் பணிகளை வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், செவ்வாய்க்கிழமை மாலை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டம் ஏப்ரல் 7 -ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி ஆழித்தோ் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
2012-ஆம் ஆண்டிலிருந்து ஆழித்தேரோட்டத்துக்கும், தேரோட்டத்துக்கு வருகை தரும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கவும், தோ்க் கட்டுமானம் மற்றும் இதர செலவுகளுக்கும் ஆதீனம் அருளாட்சிக்குள்பட்ட அபிஷேகக் கட்டளை மற்றும் அன்னதானக் கட்டளையிலிருந்து நிதி ஒதுக்கப்படுவது வழக்கம். அதன்படி, வேளாக்குறிச்சி ஆதீனம் சாா்பில் ஆழித்தேரோட்ட விழாவுக்கென நிகழாண்டில் ரூ. 36 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, திருவாரூா் கீழவீதி தேரடியில் நடைபெற்று வரும் ஆழித்தோ் கட்டுமானப் பணிகளை, வேளாக்குறிச்சி ஆதீனம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். நிகழ்வில் கோயில் செயல் அலுவலா் கவியரசு உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.