ஆஸ்திரேலியா அபாரம்: முதல் முறையாக முழுமையாக வெல்லப்பட்ட மகளிர் ஆஷஸ் தொடர்!
மகளிர் கிரிக்கெட்டில் முதல் முறையாக ஆஷஸ் கிரிக்கெட் தொடர் முழுமையாக கைப்பற்றப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்று வந்த மகளிர் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. ஆஷஸ் தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை இன்னிங்ஸ் மற்றும் 122 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இதையும் படிக்க: ரசிகர்கள்தான் என்னுடைய மிகப் பெரிய சொத்து: ஹார்திக் பாண்டியா
இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியா அதன் முதல் இன்னிங்ஸில் 440 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. அந்த அணியில் அன்னாபெல் சதர்லேண்ட் மற்றும் பெத் மூனி இருவரும் சதம் விளாசி அசத்தினர். அன்னாபெல் சதர்லேண்ட் 163 ரன்கள் (21 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்), பெத் மூனில் 106 ரன்கள் (7 பவுண்டரிகள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.
ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 270 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி, அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 148 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 122 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஷஸ் தொடரையும் முழுமையாக வென்றது. இந்த டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அன்னாபெல் சதர்லேண்ட் ஆட்ட நாயகியாகவும், தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட அலானா கிங் தொடர் நாயகியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதையும் படிக்க: முதல் டெஸ்ட்: இலங்கையை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 16-0 என்ற புள்ளி கணக்கில் இந்த தொடரை முழுமையாக வென்றது. மகளிர் கிரிக்கெட்டில் ஆஷஸ் தொடர் இவ்வாறு முழுமையாக வெல்லப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.