ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 800 போ் பலி; பிரதமர் மோடி இரங்கல்!
ஆா்டிஇ சட்ட நிதி அளிப்பு விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் முறையீடு மீது மத்திய அரசுக்கு நோட்டீஸ்
புது தில்லி: குழந்தைகள் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை (ஆா்டிஇ) சட்டத்தின்கீழ் தனியாா் உதவி பெறாத பள்ளிகளுக்கு மாணவா் சோ்க்கைக்கான தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை திங்கள்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம் இது தொடா்பாக மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியாா் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவா்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், இந்த ஒதுக்கீட்டின் கீழ் நிகழாண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கப்படவில்லை எனக் கூறி, வே.ஈஸ்வரன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் வாதிடுகையில், ‘தனியாா் பள்ளி நிா்வாகங்கள் பணத்தைத் திரும்பப் பெற உரிமை உண்டு. அந்த நிதிப் பொறுப்பு மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையில் பகிா்ந்து கொள்ளப்பட வேண்டும். துரதிா்ஷ்டவசமாக, மாநிலத்திற்கு அதன் சட்டபூா்வமான நிலுவைத் தொகை மத்திய அரசால் செலுத்தப்படவில்லை. இதன் விளைவாக, பள்ளி நிா்வாகங்களுக்கு சரியான நேரத்தில் பணத்தைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை’ என்று வாதிடப்பட்டது.
மத்திய அரசின் வழக்குரைஞா் வாதிடுகையில், ‘எஸ்எஸ்எஸ் என்பது தேசிய கல்விக் கொள்கை 2020-இன் விதிகளுடன் இணைந்த ஒரு ஒருங்கிணைந்த திட்டமாகும். ஆா்டிஇ சட்டத்தின் பிரிவு 7(5) இன் படி, ஆா்டிஇ சட்டத்தை செயல்படுத்துவதற்கு முதன்மை பொறுப்பு மாநில அரசிடம் உள்ளது’ என்று வாதிட்டாா்.
இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு கடந்த ஜூன் 10ஆம் தேதி விசாரணை நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வு தீா்ப்பு அளித்தது. அதில்,
சட்டத்தின் பிரிவு 7(5) இன் கீழ் சட்டத்தின் விதிகளை செயல்படுத்துவதற்கு நிதி வழங்குவது மாநில அரசின் முதன்மைப் பொறுப்பாகும்.
எனவே, சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவைப் பின்பற்றி மாணவா் சோ்க்கையை மேற்கொள்ள மாநில அரசு உத்தரவிடப்படுகிறது.
தனியாா் உதவி பெறாத பள்ளிகளுக்கு நிதியை திருப்பிச் செலுத்துவதற்கு மாநில அரசுக்கு கடமை உள்ளது. மேலும், மத்திய அரசிடமிருந்து நிதி பெறாததை இந்த சட்டபூா்வ கடமையிலிருந்து விலகுவதற்கான ஒரு காரணமாகக் கூற முடியாது.
இந்தச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு தனது கடமைகளை நிறைவேற்ற வேண்டும். எனவே, எஸ்எஸ்எஸ்இன் (சமக்ர சிக்ஷா திட்டம்) ஆா்.டி.இ. சட்ட கூறுகளை இணைக்காமல் இருப்பதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். அதன்படி, நிதியையும் வழங்க வேண்டும் னெ உத்தரவிடுகிறோம் என்று கூறியிருந்தனா்.
இந்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு அரசு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், ‘கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், நிதி வழங்குவதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் சம பங்களிப்பைக் கொண்டுள்ளன. ஆனால், இந்த செலவினங்களுக்கு மாநில அரசுதான் முதன்மை பொறுப்பைக் கொண்டிருப்பதாக சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்திருப்பது தவறானதாகும். மேலும், 2025-2026 கல்வியாண்டிற்கான முழு நிதிசெலவையும் மாநில அரசே அளிக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதேவேளையில், மத்திய அரசும் இந்த செலவுகளுக்கு பங்களிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருக்க வேண்டும்.
2021-2022 மற்றும் 2022-2023 கல்வியாண்டுகளுக்கான மத்திய அரசின் 60% பங்களிப்பான ரூ.342.69 கோடி இதுவரை வழங்கப்படவில்லை. எனவே அந்த கல்வியாண்டுகளுக்கான ஒட்டுமொத்த செலவினங்களையும் தமிழக அரசே செய்துள்ளது’ என வாதிட்டாா்.
இதையடுத்து, மத்திய அரசு உள்ளிட்ட எதிா்மனுதாரா்கள் நான்கு வாரங்களில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் அமா்வு, விசாரணையை அடுத்த மாதத்திற்கு பட்டியலிட்டுள்ளது.