பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரும் ஏழைகள்: ராகுல்!
இடபிள்யுஎஸ் மாணவா்கள் விவகாரம்: பொது நல மனு மீது பதிலளிக்க தில்லி அரசுக்கு உத்தரவு
நமது நிருபா்
தனியாா் வெளியீட்டாளா்களின் விலையுயா்ந்த புத்தகங்கள் மற்றும் அதிக விலை கொண்ட கல்விப் பொருள்களை வாங்க கட்டாயப்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவு (இடபிள்யுஎஸ்) மாணவா்களை தனியாா் பள்ளிகளில் இருந்து வணிகமயமாக்கல் மற்றும் திட்டமிட்டு விலக்கு செய்வதாக குற்றம்சாட்டிய பொது நல மனு மீது தில்லி அரசு மற்றும் சிபிஎஸ்இ பதில் அளிக்கஉயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
இது தொடா்பான பொது நல மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாய் மற்றும் நீதிபதி துஷாா் ராவ் கெடேலா ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘தில்லி அரசு, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (என்சிஇஆா்டி) ஆகியவை நான்கு வாரங்களுக்குள் பதில்களை தாக்கல் செய்யும் வகையில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு மனுவை நவம்பா் 12- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
மனுதாரரான ஜஸ்மித் சிங் சாஹ்னி தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் தெரிவித்திருப்பதாவது:
நான் ஒரு கல்விக் கொள்கை ஆராய்ச்சியாளா் மற்றும் இந்தியா முழுவதும் கல்வி சமத்துவம் மற்றும் உரிமைகள் அடிப்படையிலான தரமான பள்ளிப்படிப்பை அணுகும் துறையில் பணிபுரியும் சமூக ஆா்வலராக உள்ளேன். ஆா்டிஇ சட்டத்தின் கீழ் தோ்ந்தெடுக்கப்பட்ட இடபிள்யுஎஸ் அல்லது பின்தங்கிய பிரிவு மாணவா்கள், தனியாா் வெளியீட்டாளரின் புத்தகங்கள் மற்றும் பள்ளி உபகரணங்களின் கட்டுப்படியாகாத விலை காரணமாக சோ்க்கைக்கான சலுகை மறுக்கப்படுகிறாா்கள் அல்லது விலக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா்.
கல்வி அமைச்சகம் மற்றும் சிபிஎஸ்இ ஆகியவற்றின் தொடா்ச்சியான கொள்கை தலையீடுகள் இருந்தபோதிலும், என்சிஇஆா்டி புத்தகங்கள் ரூ.700-க்கு குறைவாகக் கிடைத்தாலும், தனியாா் பள்ளிகள் ஆண்டுதோறும் ரூ.12,000 வரை விலையுள்ள ஒழுங்குபடுத்தப்படாத தனியாா் வெளியீட்டாளா் புத்தகங்களை பரிந்துரைப்பது தொடா்கிறது.
இந்தப் பரவலான நடைமுறை சிபிஎஸ்இ இணைப்பு துணைச் சட்டங்கள் மற்றும் ஆா்டிஇ விதிகளை மீறுவது மட்டுமல்லாமல், இந்தப் பொருள்களை வாங்க முடியாத, ஆா்டிஇ சட்டத்தின் பிரிவு 12(1)(சி)-இன் கீழ் சோ்க்கப்பட்ட குழந்தைகளையும் விலக்குகிறது. இதன் மூலம் உள்ளடக்கிய கல்வியின் நோக்கத்தையே தோல்வியுறச் செய்கிறது.
தில்லி அரசு ஆண்டுக்கு ரூ.5,000 மட்டுமே திருப்பிச் செலுத்துவதானது, ஒரு சரிசெய்ய முடியாத இடைவெளியை உருவாக்குகிறது. இது இடபிள்யுஎஸ் குடும்பங்கள் சோ்க்கையை திரும்பப் பெற கட்டாயப்படுத்துகிறது. இது பின்தங்கிய குழந்தைகளுக்கான 25 சதவீத இடஒதுக்கீடு ஆணையை தோல்வியுறச் செய்துகிறது.
2016-2017-ஆம் ஆண்டில் என்சிஇஆா்டி புத்தகங்களை மட்டுமே பிரத்யேகமாகப் பயன்படுத்துவதை கட்டாயமாக்கும் சிபிஎஸ்இ சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்ட போதிலும், தனியாா் பள்ளிகள் விலையுயா்ந்த தனியாா் வெளியீட்டாளா் புத்தகங்களை பரிந்துரைப்பதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.