இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதியை நிறுத்திய ஓமன்; பாதிக்கப்படும் தமிழக கோழிப்பண்ணை தொழிலாளர்கள்!
இந்திய கோழி முட்டைகளின் இறக்குமதிக்கான அனுமதியை ஓமன் செவ்வாய்க்கிழமை முதல் நிறுத்தியுள்ளது. இதனால் தமிழகத்தை சார்ந்த கோழி வளர்ப்போர் வெகுவாக பாதித்தப்பட்டுள்ளனர். இந்தியாவின் முட்டை ஏற்றுமதியில் 50 சதவீத பங்கைக் கொண்டிருந்த ஓமனுக்கான ஏற்றுமதி ஜூன் மாதம் முதல் குறைந்துள்ளது. இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு சிரமத்தை உருவாக்கியுள்ளது. கத்தாரும் சமீபத்தில் இந்திய முட்டைகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் தொடர்பாக திமுக எம்.பி-யான கே.ஆர்.என் ராஜேஷ்குமார், நேற்று ராஜ்ய சபாவில் கேள்வி எழுப்பினார். இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதியை மீண்டும் தொடங்க ஓமன் மற்றும் கத்தார் அதிகாரிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை மேற்கொள்ள அவர் வலியுறுத்தினார்.
முட்டை வர்த்தகத்தில் நிலவும் கட்டுப்பாடுகளால் 15 கோடி ரூபாய் மதிப்பிலான முட்டைகள் தேங்கியுள்ளதாக நாமக்கல்லைச் சேர்ந்த முட்டை ஏற்றுமதியாளரும், கால்நடை மற்றும் வேளாண் விவசாயிகள் வர்த்தக சங்கத்தின் (LIFT) பொதுச் செயலாளருமான பி.வி.செந்தில் கூறினார்.
கத்தார் மற்றும் ஓமன் ஆகிய நாடுகள் நாமக்கல்லில் இருந்து அதிக அளவில் முட்டைகளை ஏற்றுமதி செய்து வந்த நிலையில், இந்த கடுமையான முடிவால் தங்கள் வியாபாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது என வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.
முட்டை வியாபாரிகள் இதனால் ஆறு மாதங்களாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஜூன் முதல் முட்டை இறக்குமதிக்கான அனுமதியை ஓமன் நிறுத்தியது. பல தூதரக அளவிலான விவாதங்களுக்கு பின்னர் செப்டம்பர் முதல் கடும் கட்டுப்பாடுகளோடு மீண்டும் முட்டை இறக்குமதியை தொடங்கியது. ஆனால், செவ்வாய் முதல் மீண்டும் இறக்குமதியை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.