இந்தியாவை மிரட்டிய பாகிஸ்தான் தலைமைத் தளபதி மனித குலத்தின் எதிரி: பலூச் தலைவர்!
இந்தியாவுக்கு, பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி அசீம் முனீர் அணு ஆயுத மிரட்டல் விடுத்ததற்கு, அமெரிக்க பலூச் காங்கிரஸ் தலைவர் தாரா சந்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி அசீம் முனீர் 2 மாதங்களில் 2-வது முறையாக அரசு முறைப் பயணம் மேற்கொண்டார்.
அப்போது, சிந்து நதி நீரை இந்தியா முடக்குவதை பாகிஸ்தான் அனுமதிக்காது என்றும், இந்தியா கட்டும் எத்தகைய அணையாக இருந்தாலும் அதை தகர்ப்போம் என்றும் கூறியிருந்தார்.
அவரது இந்தக் கருத்துக்கு, பல்வேறு முக்கிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், பலூசிஸ்தான் மாகாண அரசின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்க பலூச் காங்கிரஸின் தலைவருமான தாரா சந்து, அசீம் முனீர் பாகிஸ்தானின் போலியான தளபதி எனக் குறிப்பிட்டு காட்டமாகத் தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் கூறியதாவது:
“அமெரிக்காவில் இருந்து இந்தியாவை தனது அணு ஆயுதங்கள் கொண்டு மிரட்டிய பாகிஸ்தானின் போலியான ஃபீள்ட் மார்ஷல், ஜெனரல் அசீம் முனீர், வெட்கப்பட வேண்டும். அவர் மனித குலத்தின் முதல் எதிரி, இஸ்லாமின் பெயரால் மதத் தீவிரவாத்தின் பைத்தியகாரத்தனத்தால் இவ்வாறு செய்கிறார். இந்தியாவுடன் சேர்த்து முழு உலகையுமே அவர் அழிக்கத் திட்டமிட்டுகிறார்” எனக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, உலகத் தலைவர்கள் அனைவரும் பாகிஸ்தானிடம் உள்ள அனைத்து அணு ஆயுதங்களையும் திரும்பப் பெற் வேண்டுமெனவும், அந்நாட்டின் மீது பொருளாதாரம், அரசியல் உள்பட சர்வதேச அளவில் தடைகள் விதிக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இத்துடன், பாகிஸ்தானின் வளமிக்க மாகாணமான பலூசிஸ்தானை தனி நாடாக உருவாக்க வேண்டுமெனக் கோரி பலூச் அமைப்பினர் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தை இந்திய அரசு அங்கீகரித்து ஆதரவுத் தெரிவிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பாகிஸ்தானில் 4 நாள்களில் 50 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!