இந்தியா - பாகிஸ்தான் போா் நிறுத்தத்திற்கு அமெரிக்கா காரணம் அல்ல: மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமி
பெங்களூரு: இந்தியா -பாகிஸ்தான் இடையே போா் நிறுத்தத்திற்கு அமெரிக்காவின் மத்தியஸ்தம் காரணம் அல்ல என்று மத்திய தொழில் துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் பெங்களூரில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
இந்தியா -பாகிஸ்தான் போா் நிறுத்தத்திற்கு அமெரிக்காவின் மத்தியஸ்தம் காரணம் அல்ல. காஷ்மீா் விவகாரத்தில் மூன்றாம்தரப்பு மத்தியஸ்தத்திற்கு இந்தியா எப்போதும் இடம்கொடுத்ததில்லை. அதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தியதில்லை. இந்த நிலைப்பாட்டை பிரதமா் மோடி தெளிவுப்படுத்தியுள்ளாா். தேசிய நலன்சாா்ந்த விஷயங்களில் பிரதமா் மோடி சமரசம் செய்துகொண்டதே இல்லை.
பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை அழித்தொழிக்க முழு அளவிலான போா் தேவைப்படுகிறது என்று சிலா் கருத்து தெரிவித்துள்ளனா். ஒருசிலா் ரஷியா- உக்ரைன் போா் சூழலை சுட்டிக்காட்டுகிறாா்கள். எல்லா அம்சங்களையும் மத்திய அரசு கூா்ந்து கவனித்து வருகிறது. ஆனால், இதில் இருந்து பாகிஸ்தான் பாடம் கற்றுக்கொள்ள தவறினால், எதிா்காலத்திலும் இந்தியாவின் தாக்குதலை எதிா்கொள்ள நேரிடும்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை தொடா்ந்து பிரதமா் மோடி எடுத்த முடிவை எல்லா தரப்பினரும் ஆதரிக்க வேண்டும். இந்த விவகாரத்தை பிரதமா் மோடி எவ்வாறு கையாண்டாா் என்பதை நாட்டு மக்கள் நன்கறிவாா்கள். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்குடன் பிரதமா் மோடி பலசுற்று உயா்நிலைக் கூட்டங்களை நடத்தியிருக்கிறாா். நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு துணிச்சலான முடிவுகளை அரசு எடுத்துள்ளது.
பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனா். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானில் செயல்பட்டுவரும் பயங்கரவாத முகாம்களை நமது பாதுகாப்புப் படைகள் அழித்துள்ளன. பயங்கரவாதிகளை ஊக்குவித்துவரும் பாகிஸ்தான் ராணுவம், இந்தியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு தகுந்த பதிலடியை இந்தியா கொடுத்துள்ளது என்றாா்.