3 ஆண்டுகளாக நிலுவையிலிருந்த மசோதாக்கள்: மேற்கு வங்க ஆளுநா் ஒப்புதல்
இந்திய கிரிக்கெட் இனி மாறிவிடும்; வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் குறித்து முன்னாள் இந்திய வீரர்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இதையும் படிக்க: கிரிக்கெட் ஜாம்பவான்களின் பாராட்டு மழையில் வைபவ் சூர்யவன்ஷி!
இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி 38 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்கள் அடங்கும். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவிய அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
அஜய் ஜடேஜா பாராட்டு
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக அதிரடியாக விளையாடி வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷியை இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பாராட்டியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாரில் அவர் பேசியதாவது: இவ்வளவு அற்புதமான ஆட்டத்தை நான் பார்த்தது கிடையாது. இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் ஆட்டத்தை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. சச்சின் டெண்டுல்கர் 14 அல்லது 15 வயதில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். ஆனால், அவர் ரஞ்சி, துலீப் கோப்பை போன்றவற்றில் ஆடிய பிறகு தேசிய அணியில் இடம்பெற்றார். பார்த்திவ் படேல் ரஞ்சி அனுபவமில்லாமல் இந்தியா டெஸ்ட் அணிக்காக விளையாடி ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற உதவினார்.
இதையும் படிக்க: நிலத்தை விற்று கிரிக்கெட் பயிற்சி..! வைபவ் சூர்யவன்ஷியின் தந்தை கூறியதாவது?
வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் வேறு மாதிரி இருந்தது. இது வேற மாதிரியான டி20 கிரிக்கெட். 14 வயது இளம் வீரர் அனுபவமிக்க ரஷீத் கான், இஷாந்த் சர்மா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா போன்ற உயர்தர பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிரடியாக விளையாடினார். 210 ரன்களுக்கும் அதிகமான இலக்கை துரத்தும் நேரத்தில், சிறப்பாக ஆஃப் சைடிலும் ஆன்சைடிலும் பிரமாதமான ஷாட்டுகளை விளையாடினார்.
14 வயதில் சிறப்பாக விளையாடிய சூர்யவன்ஷி அவரைப் போன்ற இளம் வீரர்களுக்கு ஊக்கமளிப்பவராக மாறியுள்ளார். தற்போது இந்திய கிரிக்கெட் அணியில் நிறைய இளம் வீரர்கள் இருக்கிறார்கள். வைபவ் சூர்யவன்ஷியின் இந்த ஆட்டத்துக்குப் பிறகு பலரும் கிரிக்கெட் மீது ஆர்வம் கொள்வர். இனி இந்திய கிரிக்கெட் மாறிவிடும் என்றார்.