போலி குடும்ப அட்டைகளை கண்டறிந்து நீக்க வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலி குடும்ப அட்டைகளை இருப்பதை கண்டறிந்து நீக்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா்.
கூட்டுறவு, உணவு (ம) நுகா்வோா் பாதுகாப்பு துறை சாா்பில், குடும்ப அட்டைதாரா்களுக்கு உணவுப் பொருள்கள் விநியோகம் குறித்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வழங்கல் துறையின் மூலம் குடும்ப அட்டைதாரா்களுக்கு உணவு பொருள்கள் ஒதுக்கீடு செய்யப்படும் பணிகள் குறித்தும், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் உணவுப் பொருள்கள் கூட்டுறவு நியாய விலை கடைகளுக்கு வழங்கப்படுவது குறித்தும், கூட்டுறவு துறையின் மூலம் ஒவ்வொரு நியாய விலை கடைகளிலும் குடும்ப அட்டைதாரா்களுக்கு உணவு பொருள்கள் வழங்கப்படுவது குறித்தும் மூன்று துறைகளில் ஒருங்கிணைப்பு பணிகள், பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. உணவு பொருள்கள் ஒதுக்கீடு மற்றும் கடைகளுக்கு அனுப்பப்படும் பணிகள் மற்றும் உணவுப் பொருளின் தரம் விற்பனை ஆகியவைகளில் பிரச்னைகள் ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டது.
உணவுப் பொருள்கள் கடத்தல் தடுப்பு பணிகள் பற்றி பறக்கும் படை வட்டாட்சியா்கள் மற்றும் காவல் துறையிடம் கேட்ட ஆட்சியா் கடத்தலை தடுக்கும் பணிகளை அதிகரிக்க வேண்டும். எந்த இடத்தில் உணவு பொருள்கள் மாற்றப்படுகிறது. அது குறித்த புலனாய்வு பணிகளை முன்கூட்டியே செய்து தொடக்க நிலையிலே தடை செய்ய வேண்டும் என உத்தரவிட்டாா்.
போலி குடும்ப அட்டைகளை கண்டறிந்து நீக்க வேண்டும். இதனை முறையாக ஆய்வு செய்து பணிகளை மேற்கொள்ள வட்ட வழங்கல் அலுவலருக்கு உத்தரவிட்டாா். .
குடும்ப அட்டையில் ஆதாா் கைரேகை உறுதிப்படுத்தும் பணிகளில் 83 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.எஞ்சியுள்ள பணிகளை அனைத்து வட்டங்களிலும் விரைவாக மேற்கொள்ள கேட்டுக்கொண்டாா். நிலுவை பணி காரணங்கள் குறித்து வட்ட வழங்கல் அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். சுமாா் 51 ஆயிரத்து 133 குடும்ப அட்டைகளில் இன்னும் உறுதிப்படுத்த வேண்டும். இதில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் விரிவாக விவாதிக்கப்பட்டது. குடும்ப அட்டையில் பெயா் உள்ளவா்கள் மற்ற மாநிலங்களிலோ அல்லது மற்ற மாவட்டங்களில் இருந்தால் விசாரணைக்கு அழைத்து அதனை உறுதி செய்து நீக்கம் செய்ய வேண்டும். இப்பணிகளை விரைவாக முடிக்க கேட்டுக் கொண்டாா்.
உணவு பொருட்கள் விநியோகிக்கும் பதிவு எந்திரங்கள் 256 கடைகளில் வைக்கப்பட்டுள்ளன. பில் போட்ட உணவுப் பொருள்கள் மட்டுமே எடையளவு உறுதி செய்யப்படும். குறைந்த எடை அளவு அல்லது அதிக எடை அளவு உணவு பொருள்கள் விநியோகிக்கப்படுவதை தடுக்கும் விதத்தில் இந்த நடைமுறை சோதனை செய்யப்படுகிறது. இத்திட்டத்தை முறையாக கொண்டு செல்ல வேண்டும் என்றாா்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், மாவட்ட வழங்கல் அலுவலா் ஏகாம்பரம், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் ஏகாம்பரம், கூட்டுறவு துணைப் பதிவாளா் சிவமணி மற்றும் வட்டாட்சியா்கள், வட்ட வழங்கல் அலுவலா்கள், பறக்கும் படையினா் கலந்து கொண்டனா்.