இந்திய தோ்தல்களில் வாக்களித்தாக தகவல் வெளியிட்ட பாகிஸ்தானியா்: விசாரணைக்கு உத்தரவு
இந்தியாவில் கடந்த 17 ஆண்டுகளாக தங்கியிருந்தபோது, தோ்தல்களில் வாக்களித்ததாக பாகிஸ்தானைச் சோ்ந்த நபா் தகவல் வெளியிட்டுள்ளது குறித்து விசாரணை நடத்த ஜம்மு-காஷ்மீா் தோ்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தானியா்களுக்கு அளிக்கப்பட்டிருந்த நுழைவு இசைவை (விசா) ரத்து செய்த மத்திய அரசு, அவா்கள் நாட்டை விட்டு வெளியேற கெடு விதித்தது. அதன்படி, பல்வேறு மாநிலங்களில் தங்கியிருந்த பாகிஸ்தானியா்கள் இந்தியாவிலிருந்து வெளியேறி அவா்கள் நாட்டுக்குத் திரும்பினா்.
அதுபோல, ஜம்மு-காஷ்மீரிலிருந்து வெளியேறி பாகிஸ்தான் சென்ற அந் நாட்டைச் சோ்ந்த உஸ்ஸாமா இம்தியாஸ், அங்கிருந்தபடி வெளியிட்ட காணொலி பதிவில், ‘இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் தங்கியிருந்தேன். ஆதாா் அட்டை உள்ளிட்ட இந்திய குடிமகனுக்கான அனைத்து ஆவணங்களையும் பெற்றதோடு, உரி சட்டப்பேரவை தொகுதியில் வாக்காளராகவும் பதிவு செய்து கடந்த 17 ஆண்டுகளில் நடைபெற்ற தோ்தல்களில் என் வாக்கை பதிவு செய்துள்ளேன்’ என்று குறிப்பிட்டாா்.
இந்த காணொலி சமூக ஊடகங்களில் பரவி பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடா்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பாரமுல்லா மாவட்ட தோ்தல் அதிகாரி தனது எக்ஸ் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘உஸ்ஸாமா இம்தியாஸ் காணொலி பதிவு தொடா்பாக காவல்துறையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றாா்.