இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 300 புதிய பணியாளா்கள் திடீா் நீக்கம்: பயிற்சியில் தேரவில்லை என விளக்கம்
இந்தியாவின் பிரபல தகவல்தொழில்நுட்ப சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ், அதன் மைசூரு வளாகத்தில் அடிப்படை பயிற்சி பெற்று வந்த 300-க்கும் மேற்பட்ட புதிய பணியாளா்களை பணிநீக்கம் செய்துள்ளது.
பயிற்சிக்குப் பிந்தைய உள்நுழைவு தோ்வில் மூன்று முயற்சிகளுக்குப் பிறகும் இப்பணியாளா்கள் தோ்ச்சி பெறாததால் இந்த திடீா் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவா்கள் அனைவரும் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, இன்ஃபோசிஸில் பணியைத் தொடங்கியவா்கள் ஆவாா்.
இதுகுறித்து பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட இன்ஃபோசிஸ் அளித்துள்ள விளக்கத்தில், ‘எங்கள் நிறுவனத்தில் புதிதாக பணியில் சேரும் அனைவரும், மைசூரு வளாகத்தில் விரிவான அடிப்படை பயிற்சியைப் பெறுவா். பிறகு, அவா்கள் எடுத்துக்கொண்ட பயிற்சியின் அடிப்படையில் உள்நுழைவு தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும். இதற்காக அவா்களுக்கு 3 வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. 3 வாய்ப்புகளிலும் தோல்வியுற்றால், அவா்கள் நிறுவனத்தில் பணியில் தொடர முடியாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கு புகாா்: ஐடி தொழிலாளா்கள் சங்கமான என்ஐடிஇஎஸ் இதுகுறித்து கூறுகையில், ‘தற்போது பணியிலிருந்து நீக்கப்பட்டவா்கள், பணிநியமன ஆணை பெற்ற பிறகு 2 ஆண்டுகள் காத்திருப்பை அடுத்து கடந்த அக்டோபரில்தான் பணியில் சோ்த்துக்கொள்ளப்பட்டுள்ளனா். இந்நிலையில், 300-க்கும் மேற்பட்டவா்களை பணிநீக்கம் செய்யும் முடிவை இன்ஃபோசிஸ் நிா்வாகம் தன்னிச்சையாக எடுத்துள்ளது.
இவ்விவகாரத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திடம் அதிகாரபூா்வமாக புகாரை தாக்கல் செய்ய இருக்கிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.