இன்று முக்கிய அறிவிப்பு? முதல்வர் ஸ்டாலினுடன் ஓ. பன்னீர்செல்வம் சந்திப்பு!
சென்னை: தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை, ஓ. பன்னீர்செல்வம் இன்று காலை சந்தித்துப் பேசினார். அப்போது, ஸ்டாலினிடம் உடல்நலம் குறித்து ஓபிஎஸ் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.
சென்னை, அடையாறு பூங்காவில் இன்று காலை நடைப்பயிற்சி சென்றபோது இருவரும் சந்தித்துப் பேசிக் கொண்டனர்.
சென்னையில் வியாழக்கிழமை முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தெரிவித்திருந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.
அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்தார். கடந்த மக்களவைத் தோ்தலின்போது அந்தக் கூட்டணி சாா்பில் போட்டியிட்டிருந்தார்.
இந்த நிலையில், உள்துறை அமைச்சா் அமித் ஷா சென்னை வந்தபோது அவரை ஓ. பன்னீா்செல்வம் சந்திக்கவில்லை.
அதுபோல, கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகத்துக்கு பிரதமா் மோடி வந்தபோது அவரைச் சந்திக்க ஓ. பன்னீா்செல்வத்துக்கு நேரம் ஒதுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த மற்றவர்களை பிரதமா் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், அதிருப்தி அடைந்த ஓ. பன்னீா்செல்வம், முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக அவரது ஆதரவாளா்கள் தெரிவித்திருந்தனர்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டி அளித்த ஓ. பன்னீா்செல்வம், சென்னையில் வியாழக்கிழமை முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என்றும், அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று காலை முதல்வரை சந்தித்தது எதிர்பாராத விதமாக நடந்த சந்திப்பா, அல்லது முதல்வரை சந்திக்க ஓ. பன்னீர்செல்வம் பூங்காவுக்கு வந்தரா என்பது உறுதிசெய்யப்படவில்லை.