காரைக்கால் நகரில் 50 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு
இபிஎஸ்ஸுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!
அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கை, சென்னை உரிமையியல் நீதிமன்றம் நிராகரிக்க மறுத்ததற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்தும் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நான்காவது உதவி உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து கடந்த ஆக.1- ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி உரிமையியல் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
இதனிடையே, இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என சூரியமூர்த்தி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறித்து, நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி பி.பி.பாலாஜி முன் கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் விஜய் நாராயண், 'சூரியமூர்த்தி கட்சியின் உறுப்பினர் அல்ல. இந்த வழக்கை தாக்கல் செய்ய அவருக்கு உரிமையில்லை' என வாதிட்டார்.
சூரியமூர்த்தி தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் வேல்முருகன், கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளதை மறைத்து, தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்தியுள்ளனர் என வாதிட்டார்.
இதையடுத்து, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உரிமையியல் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி தாக்கல் செய்த வழக்கின் விசாரணைக்கும், வழக்கை நிராகரிக்க மறுத்த உத்தரவுக்கும் இடைக்காலத் தடை விதித்த உத்தரவை திரும்பப் பெற்ற நீதிபதி , வழக்கின் விசாரணையை ஆக. 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று(ஆக. 25) விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இதையும் படிக்க: பணத்துக்காக காதலனை விற்ற சிறுமி! ரூ. 42 லட்சம் கொடுத்து மீட்ட பெற்றோர்!