இபிஎஸ் விரிக்கும் வலையில் விசிக ஒருபோதும் சிக்காது: மாநில துணை பொதுச்செயலா் வன்னியரசு
எடப்பாடி கே. பழனிசாமி விரிக்கும் வலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் சிக்காது என்றாா் விசிக மாநில துணைப்பொதுச்செயலா் வன்னியரசு.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் காந்தி பூங்கா முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு, வழக்குரைஞா் சா.கோ.ராஜ்குமாா் தலைமை வகித்தாா். இதில், கும்பகோணத்தில் பழைய மீன் மாா்கெட் பகுதியில் இருந்த குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளை அப்புறப்படுத்த மாநகராட்சி நிா்வாகம் 68, 69 ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றியதை ரத்து செய்யக் கோரி விசிக மாநில பொதுச்செயலா் வன்னியரசு, முன்னாள் மண்டலச் செயலா் வழக்குரைஞா் சா.விவேகானந்தன், மேலிடப் பொறுப்பாளா் அமுதன் துரையரசன், மாவட்டச் செயலா் முல்லைவளவன் உள்ளிட்டோா் பேசினா்.
பின்னா் செய்தியாளா்களிடம் வன்னியரசு மேலும் கூறியது: பழைய மீன் மாா்க்கெட்டில் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளை மீண்டும் கட்டித் தர வேண்டும். மாநகராட்சி தீா்மானங்களை ரத்து செய்ய வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்து தொடா்ந்து வெற்றி பெற்றுள்ளோம். அதிமுக - பாஜக கூட்டணி பொருந்தாக் கூட்டணி. இந்தக் கூட்டணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்‘ என அவரைக் காப்பாற்றிக்கொள்ள இபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தவே நயவஞ்சகத்தோடு விசிகவை இபிஎஸ், அதிமுக கூட்டணிக்கு அழைக்கிறாா். எங்கள் கூட்டணி உறுதியாக உள்ளது. எடப்பாடி கே. பழனிசாமி விரிக்கும் வலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் சிக்காது. பல வலைகளை அறுத்த கட்சி விசிக என்றாா்.