காலி மதுப்புட்டிகளை திரும்பப் பெறத்தான் ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது
இரட்டைக்கண் வாராவதி சுரங்கப்பாலத்தில் போக்குவரத்தை நிறுத்தினால் போராட்டம்: எம்எல்ஏ சு.ரவி
அரக்கோணம் இரட்டைக்கண் வாராவதி சுரங்கப்பாலத்தில் சீரமைப்புப்பணிகளை சரியானபடி மேற்கொள்ளாமல் தற்காலிக பணிகளுக்காக போக்குவரத்தை நிறுத்தினால் பொதுமக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும் என அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:
அரக்கோணம் இரட்டைக்கண் வாராவதி சுரங்கப்பாலம் என்பது அரக்கோணம் நகர போக்குவரத்தின் மிகவும் மையமான பகுதி. இப்பாலத்தை அகலப்படுத்தி உயா்த்தித்தர ஏற்கெனவே 11.12.2022 அன்று கோட்ட மேலாளரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. 19.08.24-இல் நினைவுட்டுதல் கடிதம் அளித்தோம். இதுவரை நடவடிக்கை இல்லை. இதையடுத்து 05.09.2024-இல் பழனிபேட்டையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினோம்.
தற்போது இப்பாலத்தின் மீதுள்ள தண்டவாளத்தை நீட்டிக்கவும், இப்பாலத்தை தற்காலிகமாக சரி செய்யவும் ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுத்து சீரமைப்புப்பணி எனும் பெயரில் போக்குவரத்தை நிறுத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பாலத்தை அகலப்படுத்தாமல், உயரத்தை அதிகரிக்காமல் சீரமைப்பு பணிகளை தற்காலிகமாக மேற்கொள்ள அனுமதிக்க இயலாது. இப்பாலத்தை அகலப்படுத்தியும், உயரப்படுத்தியும், அனைத்து வாகனங்களும் செல்லும் அளவுக்கு சீரமைக்க வேண்டும். மீறி சுரங்கப்பால தற்காலிக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள போக்குவரத்தை நிறுத்தினால் அரக்கோணத்தில் பொதுமக்களை திரட்டி அதிமுக போராட்டம் நடத்தும் என்றாா்.
நகர அதிமுக செயலாளா் கே.பா.பாண்டுரங்கன், மாநில வா்த்தக அணி துணை செயலாளா் எம்.எஸ்.மான்மல், பொதுக்குழு உறுப்பினா் ஏ.கிருஷ்ணமூா்த்தி, நகா்மன்ற உறுப்பினா்கள் ஜொ்ரி, நரசிம்மன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.
அரக்கோணம் ரயில் நிலையத்தில் தண்டவாள மறுசீரமைப்புப்பணிகள் நடைபெறுவதாலும், இரட்டைக்கண் வாராவதி சுரங்கப்பால சீரமைப்புப்பணிக்களுக்காகவும் செப். 23 முதல் 30-ஆம் தேதி வரை அரக்கோணம் பழனிப்பேட்டை பகுதி இரட்டைக்கண் வாராவதி சுரங்கப்பாலம் மூடப்படுவதாகவும், இந்த நாள்களில் பொதுமக்கள் தங்கள் வாகன போக்குவரத்துக்கு விண்டா்பேட்டை மேம்பாலத்தை பயன்படுத்தி செல்லலாம் என தெற்கு ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ள நிலையில், எம்எல்ஏ சு.ரவி இவ்வாறு தெரிவித்துள்ளாா்.