இராக்கில் தொடரும் அவலம்.. வணிக வளாகத்தில் பயங்கர தீ! 60 பேர் பலி!
இராக் நாட்டின் கிழக்குப் பகுதியில், புதியதாகத் திறக்கப்பட்ட வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், குழந்தைகள் உள்பட 60-க்கும் மேற்பட்டோர் பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வாசிட் மாகாணத்தின் குட் நகரத்தில், புதியதாகத் திறக்கப்பட்ட 5 அடுக்குமாடிகளைக் கொண்ட வணிக வளாகத்தில், நேற்று (ஜூலை 16) பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 61 பேர் பலியானதாக, அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில், பெரும்பாலானோர் மூச்சுத்திணறி பலியானதாகக் கூறப்படும் நிலையில், தீயில் கருகி பலியான 14 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் இருந்து 45-க்கும் மேற்பட்டோரை இராக் நாட்டின் மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். இருப்பினும், பலர் மாயமாகியுள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இதையடுத்து, அம்மாகாணத்தின் ஆளுநர் முஹமது அல்-மய்யேஹ் 3 நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், இந்தத் தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் சூழலில், அடுத்த 48 மணி நேரத்தில் முதற்கட்ட அறிக்கை வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இராக் பிரதமர் முஹமது ஷியா அல்-சுடானி வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்துறை அமைச்சரை நேரில் சென்று ஆய்வு செய்து, தீ விபத்தை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, இராக்கில் தரமற்ற கட்டுமான முறைகளினால், தீ விபத்து ஏற்படுவது தொடர் கதையாகி வருகின்றது. கடந்த 2021 ஆம் ஆண்டு நசிரியா நகரத்தில் ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 60 முதல் 92 பேர் பலியானார்கள்.
கடந்த 2023-ம் ஆண்டு நினிவே மாகாணத்தில் கிறுஸ்துவர்கள் பெரும்பாலும் வசிக்கக் கூடிய ஹம்தானியா பகுதியிலிருந்த திருமண அரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ராணுவ வாகனத்தில் பலூச். விடுதலைப் படை தாக்குதல்: மேஜர் உள்பட 29 பாக். வீரர்கள் பலி!