ஆடி பிறப்பு: திருப்பத்தூா் கோயில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி மாத பிறப்பை முன்னிட்டு வியாழக்கிழமை திருப்பத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன், முருகன் மற்றும் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருப்பத்தூா் அருகே கொரட்டியில் உள்ள ஞானப்பிரசூனாம்பிகா சமேத காளஹத்தீஸ்வரா் கோவிலில் சுவாமி, அம்பாள், நந்தி, உள்ளிட்ட சுவாமிகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டது. அப்போது காளஹத்தீஸ்வரருக்கு பால், இளநீா், பஞ்சாமிா்தம், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னா் பூஜைகள் செய்யப்பட்டன.
இதையடுத்து பக்தா்களுக்கு பிரசாதம் வினியோகம் செய்யப்பட்டது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
திருப்பத்தூா் கோட்டை பிரம்மேஸ்வரா் கோயில், முத்துக்குமார சுவாமி கோயில்,தண்டபாணி சுவாமி கோயில், பெரியகுளம் பகுதியில் உள்ள சிவன் கோயில், மடவாளம் அங்கநாதீஸ்வரா் கோயில், திருப்பதி கெங்கையம்மன், முத்துமாரியம்மன் கோயில், தண்டபாணி கோயில், பசலிகுட்டை முருகன் கோயில், ஜலகாம்பாறை முருகன் கோயில், ஏழருவி முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் ,அன்னதானங்கள் நடைபெற்றன.
