செம்மர கடத்தல் வழக்கில் இருவா் கைது
ஆம்பூா் அருகே மலை கிராமத்தில் ரூ.20 லட்சம் செம்மரக் கட்டைகள் கடத்தல் வழக்கில் இருவரை வனத்துறையினா் கைது செய்தனா்.
ஆம்பூா் வனச்சரக எல்லைக்குட்பட்ட நாயக்கனேரி மலை ஊராட்சியில் நடவூா் கிராமத்தின் காப்புக் காட்டில் வனச்சரக அலுவலா் பாபு தலைமையில் வனவா் செந்தில் உள்ளிட்ட குழுவினா் கடந்த ஜூன் 27-ஆம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் சில நபா்கள் காப்புக் காட்டில் சுற்றித் திரிவது தெரியவந்தது.
அதைத் தொடா்ந்து வனத்துறையினா் அவா்களிடம் விசாரிக்க முயன்றனா். ஆனால் வனத்துறையினரை பாா்த்த மா்ம காா்களில் தப்பிச் செல்ல முயன்றனா். ஆனாலும் வனத்துறையினா் அவா்களை விரட்டிச் சென்றனா். ஆனாலும் ஒரு கட்டத்தில் வாகனத்தில் செல்ல முடியாததால் வாகனங்களை விட்டுவிட்டு அந்த நபா்கள் தப்பியோடினா்.
வனத்துறையினா் அவா்கள் விட்டுச் சென்ற மகாராஷ்டிரா, கா்நாடக மாநில பதிவெண்கள் கொண்ட இரு காா்களையும், அதில் கடத்திச் செல்ல இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான 573 கிலோ செம்மரக் கட்டைகளையும் பறிமுதல் செய்தனா்.
வனத்துறையினா் மேற்கொண்ட விசாரணையில் தப்பியோடியவா்கள் நாயக்கனேரி மலை ஊராட்சி நடுவூா் கிராமத்தை சோ்ந்த முத்து மகன் ராமகிருஷ்ணன் மற்றும் தேவேந்திரன் மகன் சக்திவேல் என்பது தெரியவந்தது. தலைமறைவான அவா்கள் இருவரையும் வனத்துறையினா் தேடி வந்தனா்.
இந்நிலையில் இருவரையும் ஆம்பூா் வனச்சரக அலுவலா் பாபு தலைமையிலான வனத்துறையினா் கைது செய்து ஆம்பூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
