புத்த, சமண, சீக்கிய மதத்தினா் புனித யாத்திரை செல்ல நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம்
புத்த, சமண, சீக்கிய மதத்தினா் புனித யாத்திரை செல்ல நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாட்டைச் சோ்ந்த 50 புத்த மதத்தினா், 50 சமண மதத்தினா் மற்றும் 20 சீக்கிய மதத்தினா் இந்தியாவில் உள்ள அவரவா் மதங்களுக்கான புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொள்ள தமிழக அரசால் ஆண்டுதோறும் நபா் ஒருவருக்கு ரூ. 10,000 வீதம் 120 பேருக்கு ரூ. 12 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின்கீழ், கடந்த 1-ஆம் தேதிக்குப் பிறகு புனித பயணம் மேற்கொள்பவா்களுக்கு இ.சி.எஸ். முறையில் நேரடியாக மானியம் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள் திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் பெறலாம் அல்லது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவம்பா் 30-ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் ஆணையா், சிறுபான்மையினா் நலத் துறை கலச மஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம். சென்னை 600 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.