இரா.நல்லக்கண்ணு: ராம பக்தர் மகன், கோடி ரூபாயை வேண்டாமென்ற மனசு; நூற்றாண்டு காணும் தோழர்
தற்போதைய தமிழகத்தின் ஒரே எளிமையான அரசியல்வாதி இரா.நல்லகண்ணுவுக்கு இன்று நூறாவது பிறந்த நாள். அரசியலில் நேர்மை பொதுவாழ்வில் தூய்மை லட்சியத்தில் உறுதி என்னும் முழக்கங்களை பல அரசியலவாதிகள் எழுப்பக்கூடும். ஆனால் இவற்றிற்குச் சொந்தக்காரர் என்றால் வாழும் உதாரணம் இவர் மட்டுமே.
தோழர் இரா.நல்லக்கண்ணு கடந்து வந்த பாதையைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாமா?
தாமிரபரணி பாயும் அன்றைய நெல்லை இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தின் திருவைகுண்டம்தான் இவரது சொந்த ஊர். இவரது அப்பா தீவிரமான ராம பக்தர். மூத்த மகன் படிப்பில் கவனம் செலுத்தாமல் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் சேர்ந்து கொண்டு திரிந்தது அவருக்குப் பிடிக்கவில்லை.
ஆனாலும் கட்சி மீதான ஆர்வம் மற்றும் அதன் செயல்பாடுகளில் தீவிரமாக இயங்கத் தொடங்கிய நல்லகண்ணு படிப்பைப் பாதியிலேயே விட்டு விட்டார்.
நல்லகண்ணுவுக்கு 24 வயதிருக்கும் போது கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை விதிக்கப்பட போர்க்குணம் கொண்ட இளைஞனாக போராட்டக் களத்துக்கு வந்தார். விளைவு அன்றைய அரசாங்கம் இவரைக் கைது செய்து மதுரை ஜெயிலில் அடைத்தது. எட்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துத் திரும்பினார்.
சிறைவாசம் முடித்து வீட்டுக்குத் திரும்பினால் அப்பாவுக்கு இவர் மீது கடும் கோபம்.
‘ரெண்டு தம்பிங்க, மூணு தங்கச்சிங்க கல்யாணத்துக்குத் தயாரா இருக்காங்க. அதனால இவரைக் கல்யாணம் முடிச்சு ஒழுங்கா குடும்பத்தைக் கவனிச்சிக்கிடறதா இருந்தா வீட்டுல இருக்கச் சொல்லுங்க, இல்லாட்டி இந்த வீட்டுக்கும் அவனுக்கும் எந்த சம்ப்ந்தமும் இல்ல’ எனக் கறாராகச் சொல்லி விட்டார்.
’கட்சிதான் இனி எல்லாம்னு ஆகிப்போச்சு, அதனால அந்த வேலைக்குத் தோதா இருக்கிற மாதிரி பொண்ணு இருந்தா பார்க்கலாம்’னு இவர் சொல்ல, ‘அப்படின்னா நீங்களே உங்க கூட்டாளிங்க கிட்ட அப்படி யாராச்சும் பொண்ணு இருந்தா பாருங்கப்பா’ என நல்லகண்ணுவின் நண்பர்களிடம் சொல்லி விடுகிறார் இவரின் தந்தை.
பொண்ணுக்கு வேறெங்கும் அலைய வேண்டி வரவில்லை. பக்கத்திலேயே மருதன்வாழ்வு என்கிற ஊரில் வசித்த அன்னாசாமியின் மகள் ரஞ்சிதத்தைப் பேசி முடிக்க, 1958ல் சிந்துபூந்துறையில் வைத்துத் திருமணம் நடந்தது. ரஞ்சிதம் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தார். பையன் கல்யாணம் முடித்தால் போதுமென நினைத்ததால் கிறிஸ்தவரான அன்னாசாமியைச் சம்பந்தியாக்கிக் கொண்டார் ராம பக்தரான நல்லகண்ணுவின் தந்தை.
பிற்காலத்தில் நல்லகண்ணுவுக்குச் சேர வேண்டிய பங்கை அவரின் மனைவி பெயரில் எழுதித் தருமளவுக்கு மாமனார் மெச்சிய மருமகளாக ஆகிவிட்டாராம் ரஞ்சிதம்.
விவசாய இயக்கப் பணிகள், கம்யூனிஸ்ட் கட்சிப் பணிகள் எனப் பதினெட்டு வயதில் தொடங்கிய பணிகளை இப்போது வரை நிறுத்தவில்லை இவர். தமிழ்நாடு முழுக்க இவரது கால் படாத குக்கிராமங்களே இருக்காது எனச் சொல்லலாம். கட்சிப் பணிகளுக்காக வீட்டிலிருந்து கிளம்பிப் போனால் வீடு திரும்ப குறைந்தது இரண்டு வாரங்கள் ஆகுமென நேர்காணல் ஒன்றில் சொல்லியிருப்பார்.
கட்சி ஒருமுறை இவரது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு கோடி ரூபாயை இவருக்குப் பரிசாக அறிவித்தது. அதைக் கட்சிக்கே திருப்பிக் கொடுத்துவிட்டார். தமிழக அரசு அம்பேத்கர் விருதும் ஒரு லட்சம் பரிசுத் தொகையும் தந்த போதும் பணத்தை விவசாயச் சங்கத்துக்குப் பாதியும் கட்சிக்கு மீதியுமாகக் கொடுத்து விட்டார்.
சாதி, மத, வர்க்க பேதங்களுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நல்லகண்ணுவின் மனைவி ரஞ்சிதம் கடந்த 2016ம் ஆண்டு இதே டிசம்பர் மாதம் காலமானார், இந்தத் தம்பதியினருக்கு காசிபாரதி, ஆண்டாள் என இரு மகள்கள். காசிபாரதி ஆசிரியராகவும் ஆண்டாள் மருத்துவராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
விவசாயிகளுக்காக, தொழிலாளர்களுக்காக, மக்களின் பொதுப் பிரச்சனைக்காக என எப்போதும் களத்தில் நிற்கிற தோழராக தமிழக மக்களுக்கு அரும்பணி செய்து வரும் இரா .நல்லக்கண்ணு அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம். அவருக்கு ஆனந்த விகடனின் பெருந்தமிழர் விருதும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பெருந்தமிழர் விருது - தோழர் இரா.நல்லகண்ணு