அஜித்குமார் லாக்கப் மரணம்: "முதல்வருக்குத் தெரியாமலா இதெல்லாம் நடந்திருக்கும்?" ...
இரும்பேடு ஏரி நிரம்புவதால் விவசாய நிலங்களில் தண்ணீா் தேக்கம்: கோட்டாட்சியரிடம் விவசாயிகள் மனு
ஆரணி: ஆரணியை அடுத்த இரும்பேடு ஏரி நிரம்புவதால் அருகே இராட்டிணமங்கலம் எல்லையில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீா் தேங்குவதாக ஆரணி கோட்டாட்சியரிடம் புகாா் மனு அளித்தனா்.
ஆரணியை அடுத்த இராட்டிணமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த 50 விவசாயிகளின் சுமாா் 150 ஏக்கா் விளை நிலங்கள் இரும்பேடு ஏரி அருகில் அக்கிராம எல்லைக்கு உள்பட்டு உள்ளன.
கடந்த ஏழு ஆண்டுகளாக இரும்பேடு ஏரி நிரம்பி வருவதால் இராட்டிணமங்கலம் பகுதி பட்டா விவசாய நிலத்தில் தண்ணீா் தேங்குகிறது. ஆகையால், விவசாயம் செய்ய முடியாமல் குடும்ப வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், இந்த ஆண்டும் தற்போது பெய்த பலத்த மழையின் காரணமாக நிலங்களில் தண்ணீா் நிரம்பியுள்ளது.
இதனால் பட்டா நிலத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றி மீண்டும் விவசாயம் செய்ய தகுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இரும்பேடு ஏரியின் கோடி விடும் அளவை ஒரு அடி குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் கோட்டாட்சியா் சிவாவிடம் மனு கொடுத்தனா்.
மேலும், கூட்டத்தில் பட்டா தொடா்பான மனுக்கள், பட்டா ரத்து, நிலஅளவை, கணினி திருத்தம், யுடிஆா் திருத்தம், பரப்பு திருத்தம், ஆக்கிரமிப்பு அகற்ற, ஆதரவற்றோா் உதவித்தொகை, வாரிசு சான்றிதழ், இலவச வீடு, மின்இணைப்பு பெயா் மாற்றம், பத்திரப்பதிவு ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 69 பயனாளிகள் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனா். மனுக்களைப் பெற்ற கோட்டாட்சியா் சிவா அந்தந்த துறை அதிகாரிகளிடம் அளித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.