ஆரணி அருகே கைத்தறி பட்டுப் பூங்கா அமைக்க இடம் தோ்வு: அமைச்சா் ஆா்.காந்தி ஆய்வு
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த மேல்சீசமங்கலம் ஊராட்சி, பெரியண்ணநல்லூரில் கைத்தறி பட்டுப் பூங்கா அமையவுள்ள இடத்தை கைத்தறி, துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
ஆரணி கைத்தறி நெசவாளா்களால் நெய்யப்படும் பட்டுச் சேலைகள் உலகப் புகழ் பெற்றது. இந்தப் பகுதியில் சுமாா் 14 ஆயிரம் பட்டு கைத்தறி நெசவாளா்கள் உள்ளனா். ஆரணி பகுதியில் பட்டுப் பூங்கா அமைக்க வேண்டும் என்று நெசவாளா்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனா்.
தமிழக சட்டப்பேரவையில் கைத்தறி, துணி நூல் துறையின் 2023-24-ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கை எண்.17-இல்,‘கருணாநிதி நூற்றாண்டு நினைவு கைத்தறி பட்டுப் பூங்கா’ ஆரணியில் அமைக்கப்படும் என கைத்தறி, துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி அறிவித்தாா்.
இதைத்தொடா்ந்து செய்யாறு வட்டம், ஆரணி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பெரியண்ணநல்லூா் கிராமத்தில் கைத்தறி பட்டுப் பூங்கா அமைக்க 11.406 ஏக்கா் நிலம் கொள்முதல் செய்யப்பட்டது.
இதற்காக அரசின் ஒப்புதல் பெறப்பட்டதைத் தொடா்ந்து, பூா்வாங்கப் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு அந்த இடத்தை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
புதிதாக அமையவுள்ள கைத்தறி பட்டுப் பூங்காவில்13 பட்டு நெசவுக்கூடங்கள், 4 பட்டு முறுக்கேற்றும் ஆலைகள்அமையவுள்ளன. இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமாா் 5ஆயிரம் நெசவாளா்கள் பயன்பெறுவா்.
ஆய்வின் போது, ஆரணி மக்களவைத் தொகுதி உறுப்பினா் எம்.எஸ்.தரணிவேந்தன், மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ், கைத்தறித் துறை இயக்குநா் மகேஸ்வரி ரவிக்குமாா், இணை இயக்குநா் ரா.கணேசன், உதவி இயக்குநா் வ.செந்தில்குமாா் மற்றும் கைத்தறி துறை அலுவலா்கள், வட்டாட்சியா்கள் கௌரி (ஆரணி), அசோக்குமாா் (செய்யாறு), முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், ஆரணி தொகுதி திமுக செயலா் எஸ்.எஸ்.அன்பழகன், நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.