இரு ஆண்டுகளில் 286 சிங்கங்கள், 456 சிறுத்தைகள் பலி!
குஜராத்தில் கடந்த இரு ஆண்டுகளில் 286 சிங்கங்கள், 456 சிறுத்தைகள் பலியானதாக அரசு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சரிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஷைலேஷ் பர்மார் வனவிலங்குகள் எண்ணிக்கை பற்றி கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு அமைச்சர் அளித்த பதிலில் குறிப்பிட்டுள்ளதாவது:
2023 ஆம் ஆண்டில் 58 மூத்த சிங்கங்கள், 63 சிங்கக் குட்டிகள் உள்பட121 சிங்கங்களும், 2024 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை உயர்ந்து 85 சிங்கங்களும், 80 சிங்கக் குட்டிகளும் சேர்த்து மொத்தமாக 165 சிங்கங்கள் பலியாகின.
இதில், இயற்கையான முறையில் 102 மூத்த சிங்கங்களும் 126 சிங்கக் குட்டிகளும் பலியாகின. ஆனால், இயற்கைக்கு மாறாக 41 சிங்கங்களும் 17 சிங்கக் குட்டிகளும் பலியாகியுள்ளன.
இந்தப் புள்ளிவிவரங்கள் விலங்குகளுக்கான வாழ்வியல் நெருக்கடிகளை அம்பலப்படுத்தியுள்ளன. இதன்மூலம், குஜராத்தில் சிங்கங்களின் எண்ணிக்கையைப் பாதுகாப்பது, அதன் வாழ்விடங்களை மேம்படுத்துவது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | தந்தையின் தலையை வெட்டி காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்ற மகன்!
சிங்கங்களின் இறப்புகள் பற்றிய அதிர்ச்சிகரத் தகவல்களைத் தொடர்ந்து, குஜராத் அரசு சட்டப்பேரவையில் சிறுத்தைகள் இறப்பு குறித்த அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களையும் வெளியிட்டது.
கடந்த 2023 ஆம் ஆண்டில் 225 சிறுத்தைகளும், 2024-ல் 231 சிறுத்தைகளும் பலியானதாகத் தெரிவித்துள்ளனர்.
இதில், 154 சிறுத்தைகளும் 71 சிறுத்தைக் குட்டிகளும் 2023 ஆம் ஆண்டு பலியாகின. அதேபோல, 162 சிறுத்தைகளும், 69 சிறுத்தைக் குட்டிகளும் 2024 ஆம் ஆண்டில் பலியாகியுள்ளன.
இந்த எண்ணிக்கையில், இயற்கையான முறையில் 201 சிறுத்தைகளும் 102 சிறுத்தைக் குட்டிகளும் பலியாகின. ஆனால், இயற்கைக்கு மாறாக 115 சிறுத்தைகளும் 38 சிறுத்தைக் குட்டிகளும் பலியாகியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கங்கள் மற்றும் சிறுத்தைகள் ஆகிய இரண்டு விலங்கினமும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், குஜராத்தின் வனவிலங்குகள் பாதுகாப்பில் அரசு தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை வலுத்து வருகின்றது.