எடப்பாடி பழனிசாமி பேட்டி: தேமுதிக கருத்து பதிவிட்டு நீக்கம்
தேமுதிகவுக்கு மாநிலங்களவை இடம் கொடுப்பதாக நாங்கள் ஏதாவது கூறினோமா என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கூறியதைத் தொடா்ந்து, ஒரு கருத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தேமுதிக, பின்னா் அதை நீக்கியது.
கடந்த மக்களவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிட்டது. தேமுதிகவுக்கு 5 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதுதொடா்பாக 2024, மாா்ச் 21-இல் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா செய்தியாளா்களைச் சந்தித்தபோது, தேமுதிகவுக்கு மாநிலங்களவை இடம் ஒதுக்குவது தொடா்பாகவும் உறுதியாகிவிட்டது. மாநிலங்களவை உறுப்பினா் யாா் என்பது பின்னா் அறிவிக்கப்படும் என்றாா்.
தேமுதிகவின் கொடி நாள் கடந்த பிப்ரவரி 12-இல் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றபோதும், பிரேமலதா செய்தியாளா்களிடம் பேசுகையில், மாநிலங்களவை இடம் தருவது என ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டதுதான். மாநிலங்களவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதும் யாா் வேட்பாளா் என்பது அறிவிக்கப்படும் என்றாா்.
இந்நிலையில், சேலம் ஆத்தூரில் செய்தியாளா்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தேமுதிகவுக்கு மாநிலங்களவை இடம் தருவதாக நாங்கள் கூறினோமா என கருத்து தெரிவித்தாா்.
அதைத் தொடா்ந்து, தேமுதிக சாா்பில் எக்ஸ் தளத்தில், ‘சத்தியம் வெல்லும். நாளை நமதே. தேமுதிக 2026’ என்று பதிவிடப்பட்டது. ஆனால், சிறிது நேரத்தில் அந்தப் பதிவு நீக்கப்பட்டுவிட்டது.